எரிபொருள் தேவையில்லாத மரம் ஏறும் கருவி

விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதில், விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் இருப்பது முக்கிய பிரச்சினை.;

Update: 2018-07-29 07:23 GMT
விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். அதில், விவசாய பணிகளுக்கு ஆள் கிடைக்காமல் இருப்பது முக்கிய பிரச்சினை. தென்னை விவசாயத்தை எடுத்துக்கொண்டால், முன்பெல்லாம் மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கு நிறைய வேலையாட்கள் இருந்தார்கள். தற்போது தென்னை, பனை ஏறுவதற்கு மிக குறைந்த அளவிலே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதனால் மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்காக பல்வேறு எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரப்பர் தோட்ட தொழிலாளி பாபுவும் (வயது 45) தென்னை ஏறுவதற்கு நவீன கருவி ஒன்றை பரிசோதனை முறையில் கண்டுபிடித்துள்ளார். அதை செயல்பாட்டுக்கு கொண்டுவர பணம் ஒரு தடையாக இருப்பதாகவும் கூறுகிறார். இவர் கடையாலுமூடு என்ற பகுதியை சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் சிந்து. பி.எஸ்சி. படிக்கும் பவித்ரா, பிளஸ்-1 படிக்கும் சித்ரா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

பாபு, தான் வடிவமைத்துள்ள மரம் ஏறும் கருவி பற்றி சொல்கிறார்:

‘‘நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடையால் பகுதியில் ரப்பர் எஸ்டேட் வைத்துள்ள ஜி.கே.நம்பூதிரி என்பவரிடம் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக வேலைபார்க்கிறேன். எனது பெற்றோரும் இதே தோட்டத்தில்தான் வேலை செய்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளைய தலைமுறையினர் பனை மற்றும் தென்னை மரம் ஏறும் கருவியை கண்டுபிடித்து, இந்த விவசாயம் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். அவரது கருத்துதான் நான் தென்னை மரம் ஏறும் கருவியை கண்டு பிடிக்க உந்துசக்தியாக அமைந்தது. எனது முயற்சிக்கு எஸ்டேட் அதிபர் ஜி.கே.நம்பூதிரியும் ஊக்கம் தந்தார். அதன் அடிப்படையில் தற்போது நான், பரிசோதனை அடிப்படையில் மரம் ஏறும் கருவியை வடிவமைத்திருக்கிறேன். இது மூன்று ஆண்டு உழைப்பாகும். இதற்காக அடிக்கடி நான் கோவைக்கு சென்று உதிரிபாகங்களை சேகரித்தேன்.

நான் வடிவமைத்துள்ள தென்னை மரம் ஏறும் கருவியின் பெரும்பாலான பாகங்கள் அலுமினியத்தாலும், சில பாகங்கள் பிளாஸ்டிக்காலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது 6 கிலோ எடைகொண்டது.

இதில் உள்ள அலுமினிய உதிரிபாகங்களை மாற்றிவிட்டு, இரும்பை கொண்டு வடிவமைத்தால் தொழிலாளர்கள் எளிதாக தென்னைமரங்களில் ஏறலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மரம் ஏறும் கருவிக்கு மின்சாரமோ, எரிபொருளோ தேவை இல்லை.

இந்த கருவியின் முக்கிய பாகம் அதில் உள்ள ‘கியர் பாக்ஸ்'தான். இந்த கருவியின் உதவியால் 100 கிலோ எடை கொண்டவர்கள்கூட தென்னை மரங்களில் ஏறலாம். சாதாரணமாக தென்னை மரம் ஏறும் தொழிலாளி நாள் ஒன்றுக்கு சுயமாக 100 மரம் ஏறுபவராக இருந்தால், இந்த கருவியை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு 300 மரங்கள் வரை ஏறலாம். சோர்வின்றி இதனை இயக்கி பணி செய்யலாம். அதனால் விவசாயிகளுக்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.

மாதிரி வடிவமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவியை இனி உலோகத்தில் வடிவமைத்ததும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிடலாம். அதற்குரிய பண வசதி என்னிடம் இல்லை. உதவி கிடைத்ததும், இதை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துவிட முடியும். இந்த கருவியை வடிவமைக்க அரசுத்துறை அதிகாரிகளும், அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களும் உதவியிருக் கிறார்கள்’’ என்கிறார், பாபு.

மேலும் செய்திகள்