வேத கணிதத்தால் சீனாவை கவர்ந்த தமிழக ஆசிரியர்
ஈரோட்டை சேர்ந்த கணக்கு ஆசிரியர் ஐசக் தேவகுமார் சீன அரசுப் பள்ளியில் பணியாற்றி, அந்த நாட்டு அரசின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதினை பெற்று சாதனைபடைத்திருக்கிறார்.
ஈரோட்டை சேர்ந்த கணக்கு ஆசிரியர் ஐசக் தேவகுமார் சீன அரசுப் பள்ளியில் பணியாற்றி, அந்த நாட்டு அரசின் சிறந்த வெளிநாட்டு ஆசிரியருக்கான விருதினை பெற்று சாதனைபடைத்திருக்கிறார். இதன் மூலம் சீனாவில் இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார், ஐசக் தேவகுமார். இவரது தந்தை ஐசக், ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். தாயார் சரோஜா.
ஐசக் தேவகுமார் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் பயின்றபோது இவருக்குள் இருந்த ஆற்றல் வெளிப்பட தொடங்கியிருக்கிறது. வழக்கமாக கணிதம் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்கள் கற்றுக்கொடுப்பதை அப்படியே மனதில் நிறுத்தி, அவர்கள் சொல்லும் வழிமுறைகளில் விடையை கண்டுபிடித்து தேர்ச்சி பெறுவார்கள். ஆனால் தேவகுமார் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார். அந்த சிந்தனைதான் அவரை சாதனையாளராக மாற்றியிருக்கிறது. அதுபற்றி அவர் சொல்லக்கேட்போம்!
‘‘நான் கல்லூரியில் இளநிலை கணிதம் படித்தபோது எனது பேராசிரியர் ஒருவர், ‘கணக்குகளை எளிதில் புரிந்துகொள்ளவும், விரைவாக தீர்வு காணவும் வேத கணிதம் என்ற ஒன்று இருக்கிறது’ என்று கூறினார். அந்த கணித முறையை கற்றுக்கொண்டு அதன்படி விரைவாக கணக்குகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று ஆசைப்பட்டு, அது பற்றிய விவரங்களை சேகரித்தேன்.
வேத கணிதம் என்பது மிகப்பழமையான இந்திய கணித முறை. எந்த வகை கணக்குகளாக இருந்தாலும் அவைகளுக்கு எளிதாக தீர்வுகாணும் வழிமுறை அதில் இருக்கிறது. ஒரு பெருக்கல் கணக்கு என்றால் அதற்கு 4 படிகள் கடப்பதற்கு பதில், இதில் ஒரே படியில் தீர்வு கண்டுவிடலாம். வேத கணிதத்தில் நான் பெற்ற பயிற்சி, எனக்கு கணக்கு போட்டுப்பார்க்காமலேயே விடைகளை கண்டறியும் ஆற்றலைத் தந்தது.
அத்துடன் நிற்காமல் அனைத்து வகை கணக்குகளுக்கும் வேத கணித முறையில் தீர்வு காண்பதற்கான எனது ஆராய்ச்சியை தொடங்கினேன். அதில் என்னால் சிறப்பாக தேர்ச்சி அடைய முடிந்தது. இதற்கிடையே இளநிலை பட்டப்படிப்பை முடித்து, ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை கணிதம் படிக்க சேர்ந்தேன். அப்போது எனது பெயரில் பயிற்சி மையம் தொடங்கி மாணவர்களுக்கு கணக்கு கற்றுத்தந்தேன். பின்னர் பி.எட். படித்துவிட்டு தனியார் பள்ளி ஆசிரியரானேன். அதோடு கணிதம் தொடர்பான கருத்தரங்குகளில் கலந்துகொண்டு எனது ஆராய்ச்சிகளை சமர்ப்பித்து வந்தேன். நான் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் சூழ்நிலை ஏற்பட்டாலும், எனது கணித ஆராய்ச்சிக்கு எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்டேன்.
இந்த நிலையில் வெளிநாடு சென்று ஆசிரியர் பணியாற்றலாம் என்ற ஆசை ஏற்பட்டது. அமெரிக்கா செல்ல விரும்பினேன். ஆனால் அது கைகூடவில்லை. அப்போதுதான் சீனாவில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு கணக்கு ஆசிரியர் தேவை என்ற விளம்பரம் என் கண்ணில் பட்டது. எனக்கு ஆங்கிலம்தான் சரளமாக பேச வரும். சீன மொழி தெரியாமல் அங்கு போய் என்ன செய்வது என்ற சிந்தனை முதலில் ஏற்பட்டது. ஆனாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பித்தேன். அழைத்தார்கள். அவர்கள் வைத்த தேர்வில் வெற்றி பெற்றேன்.
அதே நேரம் எனது தந்தை மரணப் படுக்கையில் இருந்தார். எனக்கு திரு மணம் நடத்தி வைத்தார்கள். என் தந்தையின் விருப்பத்தோடு, மனைவியையும் அழைத்துக்கொண்டு சீனாவுக்கு சென்றேன். அங்கு பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்தை மரணமடைந்துவிட்டார். அந்த சோகத்தை வெளிக்காட்ட முடியாமல், பணியில் தொடர்ந்தேன்’’ என்கிறார், ஐசக் தேவகுமார்.
புரியாத மொழி, தெரியாத நபர்கள், எங்கோ இருக்கும் நாடு.. எப்படி இவர் சீனாவில் சமாளித்தார்?
‘‘எனக்கு வேலை கொடுத்திருப்பது சீன அரசாங்கம். நான் பிரமாண்டமான, மிகவும் பழமையான பள்ளிக்கூடத்தில் பணியாற்றுகிறேன். இங்குள்ள 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரையான நிலையில் இருக்கும் அங்குள்ள மாணவர்களுக்கு நான் பாடம் நடத்துகிறேன். அங்கே எனக்கு கை கொடுத்தது வேத கணித முறைதான். அதுவரை மிகப்பெரிய வழிமுறைகளோடு, பல்வேறு படிகளை கடந்து கணக்குக்கான விடையை கண்டு பிடித்த சீன மாணவர்கள், என்னால் ஒரு சில படிகளிலேயே தீர்வு கிடைத்ததும் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முன்வந்தார்கள். அதுவரை செல்போனில் விளையாடிக்கொண்டு வகுப்பில் குளறு படி செய்து கொண்டிருந்த மாணவர்கள்கூட கணக்கு பாடத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். இது எனக்கும், மாணவர் களுக்கும் இடையில் ஒரு அன்புப் பாலத்தை உருவாக்கியது. அதன் மூலம் பள்ளியில் அனைவருக்கும் பிடித்த ஆசிரியராக வலம் வந்தேன்.
2 ஆண்டுகள் கடந்த நிலையில் சீன அரசு சிறந்த ஆசிரியர்களை கண்டறியும் விருதுக்கான தேர்வை நடத்தியது. அதற்கான குழுவினர் ஒவ்வொரு பள்ளியாக சென்று, அங்கு ஆசிரியர்களின் செயல்பாடுகள் பிற நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்தார்கள். அதன்படி அந்தக்குழு நான் பணி செய்து வரும் சிஸ்சுவான் மாகாணம் சென்ங்டு பகுதியில் உள்ள ஷிஷி அரசு பள்ளிக்கு வந்தது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்து விட்டு அமெரிக்க பல் கலைக்கழகங்களுக்கு செல்ல விரும்பும் மாணவ-மாணவிகளுக்காக நுண்கணித வகுப்பை நடத்திக்கொண்டிருந்தேன். எனது கணித அறிவு, பாடம் எடுக்கும் விதம் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு குறிப்பெடுத்துவிட்டு சென்றார்கள்.
அந்த குழுவினர் எனக்கு அதிக புள்ளிகள் வழங்கியதால் நான் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்வானேன். சீனாவில் வேலைபார்க்கும் அனைத்து வெளிநாட்டு ஆசிரியர்களில் நான் சிறந்தவராக தேர்வாகியுள்ளேன். ஒரு இந்தியர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவது இதுதான் முதல் முறை’’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்துகிறார், இவர்.
அந்த விருதுக்கு பிறகு அங்குள்ள ஆசிரியர்களும், மாணவர்களும் ஐசக் தேவகுமாருக்கு விசேஷ மரியாதை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
‘‘விருதுக்கு பிறகு என்னை எல்லோரும் பெருமையோடு பார்த்தார்கள். நான் தொடக்கத்தில் இருந்தே எனக்கு வணக்கம் தெரிவிப்பவர்களுக்கு நமது கலாசாரப்படி கைகூப்பி வணக்கம் தெரிவிப்பேன். முதலில் அதை வித்தியாசமாக பார்த்தவர்கள், நான் விருது பெற்ற பின்பு என்னைப்போல் அவர்களும் கைகூப்பி வணக்கம் தெரிவிக் கிறார்கள். தமிழில் வணக்கத்துக்கு எப்படி சொல்வது என்றும் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். அதுவரை சீன மொழியில் எப்படி பேசுவது என்று தட்டுத்தடுமாறி கேட்டுக்கொண்டு இருந்த என்னிடம் தமிழ் எப்படி பேசுவது? என்று அவர்கள் கேட்பது வித்தியாசமாக இருக்கிறது. காரணம், சீனர்கள் கடுமையான மொழிப்பற்று கொண்டவர்கள். அவர்கள் சீன மொழியைத்தவிர ஆங்கிலத்தை மட்டுமே கற்றுக்கொள்வார்கள். அதை வேலைக்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் நாட்டில் சீன மொழியைதான் பேசுவார்கள். நானும் தற்போது கொஞ்சம் சீன மொழி கற்றுவிட்டேன். எனது மாணவர்களிடம் பேசும்போது தமிழின் பெருமையை எடுத்துக்கூறவும் தவறுவதில்லை’’ என்கிறார்.
இவருக்கு தமிழில் பேச ஒரே துணையாக அங்கே இருப்பவர் அவரது மனைவி ஜென்சி. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஜென்சியின் பெற்றோர் ஈரோட்டில் வசித்து வருகிறார்கள். செவிலியர் பயிற்சி பெற்ற ஜென்சி தற்போது சீனாவில் கணவருடன் வசிக்கிறார்.
அவர் தனது சீன வாழ்க்கை அனுபவத்தை சொல்கிறார்:
‘‘எங்களுக்கு அங்கு அரசாங்க குடியிருப்பு வழங்கியிருக்கிறார்கள். அங்கு பல நாடுகளை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். சீனர்கள் மிகுந்த அன்போடு பழகக்கூடியவர்கள். இங்கே பக்கத்து வீட்டினருடன் எப்படி பேசுவோமோ, அப்படித்தான் அங்கும் பழகுகிறோம். ஆனால் என்ன சீன மொழி தெரியாததால் சிரித்தே சமாளித்து விடுவேன். இப்போது கொஞ்சம் சீன மொழி பேசுகிறேன். அவர்கள் எனது கருத்த தலை முடி, முக அழகு பற்றி அடிக்கடி கேட்பார்கள். நான் அழகுக்கலை பற்றி படித்திருப்பதால், சீன பெண்களுக்கு அழகு விளக்கம் அளிப்பதோடு, அவர் களுக்கு மேக்கப்பும் போட்டுவிடுகிறேன். இப்போது அங்குள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு கூட எங்களை நன்றாக தெரியும். எங்களை பார்த்தாலே கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்வார்கள். அங்கு ஆட்டோ டிரைவர்கள் சரியான கட்டணத்தை மட்டுமே பெறுவார்கள்.
எனக்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அங்கு அரசு மருத்துவமனைதான் இருப்பதாக கூறினார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளே அங்கு கிடையாதாம். நமது நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை போன்றுதான் இருக்கும் என்ற பயத்தோடு சென்ற எனக்கு அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. இங்குள்ள தனியார் மருத்துவமனைகளை விட அது தரத்தில் உயர்ந்திருந்தது. டாக்டர்களும், செவிலியர்களும் கனிவாக கவனிக் கிறார்கள். எங்கும் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. அங்கு கிடைத்த சிகிச்சை எனக்கு மனநிறைவைத் தந்தது. இன்னொரு விஷயம், அங்கு அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு உள்ளது. எங்களுக்கும் உள்ளது. என் நர்ஸ் படிப்பிற்கு அங்கு வேலைபெறும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்கிறார் ஜென்சி.
‘‘சீனாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. ஆனால் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம்தான். அதனால் ஏழைகள், வசதிபடைத்தவர்கள் என்ற பேதமின்றி ஒரே மாதிரியான கல்வியை அனைவராலும் பெற முடிகிறது. அங்கு ‘மாணவர்களின் மனம் புண்படும்படி ஆசிரியர்கள் நடந்துகொள்ளக்கூடாது. தவறு செய்யும் மாணவரைக்கூட வகுப்பறையில்வைத்து திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. தனியாக அழைத்து அறிவுரை கூற வேண்டும். அப்படி பேசும்போதுகூட மனம் வேதனைப்படும்படி பேசி விடக்கூடாது’ என்பது சீன அரசின் கட்டளை. எனது வகுப்பில் அதுபோன்ற பிரச்சினை எதுவும் வரவில்லை. பள்ளிக்கூடங்கள் சிறந்த கட்டமைப்புடன் செயல்படுகிறது. அதை பார்க்கும்போது தமிழ்நாட்டில் கல்வியில் நாம் நிறைய மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்’’ என்கிறார் ஐசக் தேவகுமார்.
இவர் ஈரோட்டின் ராமானுஜம் என்று போற்றப்பட்டவர். தென் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றும் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. தற்போது விடுமுறையில் ஈரோடு வந்துள்ள ஐசக் தேவகுமார் தனது குடும்பத்தினரோடு தங்கியுள்ளார். தமிழகத்தில் சிறந்த கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கும் எண்ணம் இவருக்கு இருக்கிறது.