வடகர்நாடகத்திற்கு தனிமாநில கோரிக்கையை பா.ஜனதா ஏற்காது எடியூரப்பா பேட்டி

மாநிலத்தை பிரித்தாளும் கொள்கையில் குமாரசாமி ஈடுபடுவதாகவும், வடகர்நாடகத்திற்கு தனிமாநில கோரிக்கையை பா.ஜனதா ஒருபோதும் ஏற்காது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-28 23:15 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட கூட்டம் பெங்களூரு புறநகர் எலகங்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார், முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் அசோக், ஈசுவரப்பா மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை மக்களிடையே எடுத்து செல்வது பற்றியும், வடகர்நாடக தனிமாநில பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டம் முடிந்ததும் மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில பா.ஜனதாவின் உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம்(ஆகஸ்டு) 9-ந் தேதியில் இருந்து 3 குழுக்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரதமரின் சாதனைகள், கூட்டணி ஆட்சியின் தோல்விகள், வடகர்நாடகத்துக்கு ஏற்பட்டுள்ள அநியாயங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்து கூறப்படும்.

வடகர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை, பட்ஜெட்டில் அந்த மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி முழு அடைப்புக்கும், தனிமாநில கோரிக்கையும் எழுந்துள்ளது. இதற்கு காரணம் முதல்-மந்திரி குமாரசாமி தான். மாநிலத்தை பிரித்தாளும் கொள்கையில் அவர் ஈடுபடுகிறார். தென் கர்நாடகம், வடகர்நாடகம் என்று குமாரசாமி பேசுவது சரியல்ல. வடகர்நாடக மக்கள் ஓட்டுப்போடாததால், அந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய முடியாது என்று அதிகார தோரணையில் பேசியுள்ளார்.

இதனால் தான் வடகர்நாடகத்தில் தனிமாநில கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தனது நிலை என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கர்நாடக மக்களுக்கு முதல்-மந்திரி என்பதை மறந்து, 37 தொகுதிகளுக்கு மட்டும் தான் முதல்-மந்திரி என்று குமாரசாமி தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பேச்சால் வடகர்நாடகம் பற்றி எரிகிறது. அங்கு அமைதி திரும்ப, தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விட்டு, தொடர்ந்து பிரித்தாளும் கொள்கையில் குமாரசாமி பேசுவது கண்டிக்கத்தக்கது.

வடகர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புறக்கணிக்கப்படுவதை பா.ஜனதா சகித்து கொள்ளாது. அந்த பகுதி மக்கள் நடத்தும் முழு அடைப்புக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும். தென் கர்நாடகம், வடகர்நாடகம் எந்த பாகுபாடு பா.ஜனதாவுக்கு கிடையாது. அகண்ட கர்நாடகத்தை உருவாக்குவதே பா.ஜனதாவின் நோக்கம். மாநிலத்தை உடைக்க பா.ஜனதா எக்காலத்திலும் அனுமதிக்காது. வடகர்நாடகத்திற்கு தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையையும் பா.ஜனதா ஒரு போதும் ஏற்காது. வடகர்நாடகத்தை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்ரீராமுலு பேசவில்லை. அவ்வாறு பேசி இருந்தால், அவரிடம் விளக்கம் கேட்பேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்