வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கைது

சுரங்கப்பாதை அமைத்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-07-28 23:05 GMT
மும்பை,

சோலாப்பூர் செம்புர்னி பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கும்பல் இந்த வங்கிக்கு அருகில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்தது. பின்னர் அந்த கும்பல் கடையில் இருந்துகொண்டே வங்கிக்கு சுரங்கப்பாதை அமைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

இதுகுறித்து அறிந்த வங்கி நிர்வாகிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். எனினும் போலீசார் அங்கு வருவதற்குள் அந்த கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை மஜித் பந்தர் பகுதியில் மீன் வியாபாரிகள் என சுற்றித்திரிந்த சிலரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஜார்க்கண்டை சேர்ந்த அம்ருதீன் சேக் (வயது24), நசீக் சேக் (35), சஜன் சேக் (34), சவுதாகர் சம்செர் (32) என்பதும், இவர்கள் தான் சோலாப்பூரில் வங்கியில் சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் இதேபாணியில் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளையடித்தார்களா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்