மனைவியுடன் நடந்து சென்ற என்ஜினீயரை மிரட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது

என்ஜினீயரை மிரட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-28 23:03 GMT
திருப்பூர்,

திருப்பூரில் நள்ளிரவில் மனைவியுடன் நடந்து சென்ற என்ஜினீயரை மிரட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் கொங்கு நகரை சேர்ந்தவர் சர்வலோகதயாபரன்(வயது 68). என்ஜினீயர். இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே தனது மனைவி பர்வதவர்த்தினியை (60) அழைத்துக்கொண்டு ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் நள்ளிரவு 12.30 மணி அளவில் 2 பேரும் ஊத்துக்குளி ரோடு குருவாயூரப்பன் கோவில் அருகே நடந்து சென்றபோது, அந்த வழியாக ஸ்கூட்டரில் 3 பேர் வந்துள்ளனர்.

திடீரென்று 3 பேரும் சேர்ந்து சர்வலோகதயாபரன் மற்றும் அவருடைய மனைவியை வழிமறித்து பணத்தை எடுக்குமாறு மிரட்டியுள்ளனர். அவர்களிடம் பணம் இல்லாததால் சர்வலோகதயாபரனிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார்கள். இதுகுறித்து அவர் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் செல்போன் பறிப்பு ஆசாமிகளுக்கு 30 வயதுக்குள் இருக்கும் என்றும், அவர்கள் வந்த ஸ்கூட்டரின் பதிவு எண் உள்ளிட்ட அடையாளங்களையும் அவர் தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் கொடிக்கம்பம் நால்ரோடு அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக, ஸ்கூட்டரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சர்வலோகதயாபரனிடம் செல்போன் பறித்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் சுகுமார் நகரை சேர்ந்த சண்முகம்(28), அதே பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா(31), கோம்பைத்தோட்டத்தை சேர்ந்த சையது குலாம்(23) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்