அரசு அதிகாரி பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது அம்பலம்

ஊழல் தடுப்பு படை சோதனையில் அரசு அதிகாரி பல கோடி ரூபாய்க்கு சொத்து குவித்தது அம்பலம் ஆகி உள்ளது.

Update: 2018-07-28 22:53 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவின் துணை இயக்குனராக பணியாற்றி வருபவர் நவநீத் மோகன். இவர் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து நேற்று முன்தினம் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அவருடைய 2 வீடுகள், அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது வீடுகளில் இருந்த சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி பரிசீலனை செய்தனர். தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டன. முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறார்கள்.

இந்த சோதனையின் முடிவில், நவநீத் மோகன் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது அம்பலமாகியுள்ளது. அதாவது நவநீத் மோகனுக்கு ஒரு வீடு, 5 வீட்டு மனைகள், 15 ஏக்கர் விவசாய நிலம், ஒரு பண்ணை வீடு, ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம், 661 கிராம் தங்கநகைகள், 18 கிலோ 278 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள், வங்கி சேமிப்பில் ரூ.3.63 லட்சம், ரூ.37.80 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அவர் வரி ஏய்ப்பு செய்து வாங்கினாரா? என்பது குறித்து தொடர்ச்சியாக ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்