மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூரில் கடையடைப்பு

மெட்ரோ ரெயில்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூரில் நேற்று கடைகளை அடைத்து, வியாபாரிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-28 21:04 GMT
திரு.வி.க.நகர்,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதவரம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம் போன்ற சிறுவியாபாரிகள் நிறைந்த பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இதனால் பல கடைகள் இடிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூரில் உள்ள மாதவரம் நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், வியாபாரிகள் ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார்.

இதில் மாதவரம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ரஞ்சன், செம்பியம் தலைவர் கோட்டிஸ்வரன் மற்றும் செந்தமிழ் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் வணிகர் சங்க பேரவைத்தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஏற்கனவே வகுத்த வழித்தடத்தை மாற்றி தற்போது புதிய வழித்தடம் வகுக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் உள்ள பகுதியை திட்டமிட்டு அழித்து பெரம்பூர் பகுதியில் கட்டப்படும் 8,500 கடைகள் அடங்கிய ஆசியாவின் மிகப்பெரிய வணிக வளாகத்திற்கு ஆதரவாக இந்த மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

எக்காரணத்திற்காகவும் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வளர்ச்சி தேவை தான். ஆனால் வாழ்வாதாரத்தை அழிக்கும் வளர்ச்சி தேவையற்றது.

அமைதி வழியில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறோம். ஆனால் அரசு இதுவரை எங்கள் கோரிக்கையை செவி கொடுத்து கேட்டதாக தெரியவில்லை. அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வரும் எங்களை வன்முறை போராட்டத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள். அப்படி நடக்கும் வன்முறைக்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு வெள்ளையன் கூறினார்.

மேலும் செய்திகள்