கருணாநிதி பூரண குணம் அடைய பிரார்த்திக்கிறேன் - இல.கணேசன் பேட்டி

கருணாநிதி பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக ஈரோட்டில் இல.கணேசன் கூறினார்.

Update: 2018-07-28 23:00 GMT

ஈரோடு,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க தலைவரும், மூத்த அரசியல் வாதியுமான கருணாநிதி ஏற்கனவே வயது முதிர்ச்சியின் காரணமாக சற்று நலம் குன்றி இருந்தாலும், கடந்த 4 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த செய்தியை சிலர் எனக்கு தொலைபேசி மூலமாக சொன்னபோது சற்று கவலை தரும்படி இருந்தது.

இதை உறுதிப்படுத்துவதற்காக நான் கனிமொழி எம்.பி.யை தொடர்பு கொண்டு விசாரித்தேன். அப்போது அவர், ‘அவசரமான ஒரு சிகிச்சை தேவைப்பட்டது உண்மைதான் என்றாலும், கவலைப்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை இல்லை’ என்று கூறினார். இதை கேட்டு நான் ஆறுதல் அடைந்தேன்.

நேற்று (நேற்று முன்தினம்) மீண்டும் கருணாநிதி மருத்துவமனைக்கு சென்றிருந்தாலும் எனக்கு அங்கிருந்து வந்த தகவலின்படி அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளது. அவர் விரைவில் பூரண குணம் பெறவேண்டும். எந்த பேச்சாற்றலால் மக்கள் மனதை அவர் கவர்ந்தாரோ, அந்த நாவன்மையோடு பேசக்கூடிய நிலை அவருக்கு மீண்டும் வரவேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

2019–ம் ஆண்டு தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தற்போது தொடங்கி இருக்கிறோம். தெருமுனை பிரசாரத்தில் ஆற்றல் உள்ள 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக துணை முதல் –அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் போனதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. எந்தெந்த காரணத்தை வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தோல்வி அடைந்தார்களோ, அதே காரணத்தை தேர்தலில் கொண்டு வந்தாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஏற்பட்ட நிலை தான் ஏற்படும். வருமான வரித்துறையினருக்கு வரும் தகவலை கொண்டு அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபடுகிறார்கள். இதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

மேலும் செய்திகள்