தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை எதிர்த்து ஈரோடு மாவட்டத்தில் 4 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-28 23:15 GMT

ஈரோடு,

தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளின் முன்பு போராட்டம் தொடர்பாக நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பி சென்றனர். அதன்பின்னர் அவர்கள் மாலையில் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டனர். ஆனால் அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்ற அத்தியாவசிய சிகிச்சைகள் உடனுக்குடன் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் ஈரோடு சம்பத்நகரில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் நேற்று காலை திரண்டனர். அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தலைமை தாங்கினார். சங்கத்தின் இளம் டாக்டர்கள் பிரிவு தலைவர் டாக்டர் அபுல்ஹாசன் முன்னிலை வகித்தார். இதில் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் தங்கவேல், செயலாளர் டாக்டர் சச்சிதானந்தம் உள்பட டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் சத்தியமங்கலத்தில் இந்திய மருத்துவர்கள் சங்க கிளையில் உறுப்பினர்களாக உள்ள 75 டாக்டர்கள் நேற்று காலை 9.30 மணி அளவில் அலுவலகத்துக்கு வந்தார்கள். பின்னர் அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு சங்க தலைவர் சின்னசாமி, செயலாளர் தியாகு, பி.தங்கவேல், சாமியப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை மனுக்களை கொடுத்தார்கள்.

கோபியில் 45 மருத்துவமனைகள் மூடப்பட்டன. போராட்டத்துக்கான காரணம் குறித்து மருத்துவமனைகள் முன்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த 150 டாக்டர்கள், புறநோயாளிகளிக்கு சிகிச்சை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டது.

இதுகுறித்து சங்க மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா கூறியதாவது:–

தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதா மூலம் இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதில் 5 பேர் மட்டுமே டாக்டர்களால் நியமிக்கப்படுகிறார்கள். அலோபதி டாக்டர்கள் அல்லாத ஓமியோபதி, சித்தா போன்ற பிற மருத்துவ பிரிவுகளை சேர்ந்த டாக்டர்களும் தேசிய மருத்துவ கமி‌ஷனில் இடம்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் 6 மாத பயிற்சி எடுப்பதன் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் வழிவகை செய்கிறது. இது பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். மேலும், போலி டாக்டர்களுக்கு அரசே அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்துவிடும்.

தேசிய மருத்துவ கமி‌ஷனை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் 700–க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் சுமார் 4 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நோயாளிகளுக்கு அவசர கால சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்