கிராமங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழக அரசு அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற அதிரடி உத்தரவிட்டுள்ளதன் எதிரொலியாக ராமநாதபுரம் கலெக்டர் நடராஜன் கிராமங்களுக்கு மாலை நேரங்களில் திடீர் ஆய்வு செய்கிறார்.

Update: 2018-07-28 22:15 GMT

ராமநாதபுரம்,

தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, கழிப்பறை வசதிகளை 100 சதவீதம் முழுமையாக நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தெருவிளக்கு பழுதுகளை 48 மணி நேரத்திற்குள் சரிசெய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படை வசதிகளை ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து சனிக்கிழமைகளில் அதுதொடர்பான கூட்டம் நடத்தி ஞாயிறுதோறும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்து தன்னிறைவு பெறச்செய்ய அரசு தீவிரமாக ஈடுபட்டுஉள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமங்கள் வாரியாக சாலைவசதி, தெருவிளக்கு, குடிநீர், கழிப்பறை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் நாள்தோறும் மாலை நேரங்களில் ஊராட்சிகளுக்கு நேரில் சென்று கிராமங்கள்தோறும் மக்களை சந்தித்து இந்த 4 தேவைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

கிராமங்களில் தெருவிளக்கு பழுது தொடர்பாக புகார் தெரிவித்தால் 48 மணி நேரத்திற்குள் சரிசெய்து தெருவிளக்கினை எரிய செய்ய வேண்டும் என்று அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆணையாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் கொண்டு செல்ல முடியாத பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடாக உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் மூலமும், லாரிகள் மூலமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

குடிநீர், இணைப்பு, சாலைவசதி, கழிப்பறை, புதிய தெருவிளக்கு வசதி கோரி மக்கள் மனு கொடுத்தால் உடனுக்குடன் நிறைவேற்ற தேவையான நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார். அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளதன் எதிரொலியாக கலெக்டர் நடராஜன் ஊராட்சிகளில் கிராமங்களுக்கு மாலை நேரங்களில் திடீர் ஆய்வு செய்வதால் அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்