காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா ஆலய 125–வது ஆண்டு நிறைவு விழா

காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா ஆலய 125–வது ஆண்டு நிறைவு விழாயொட்டி மகிமை கோபுரத்தை மறைமாவட்ட ஆயர் திறந்து வைத்தார்.

Update: 2018-07-28 22:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் புதுமை புகழ் புனித செங்கோல் மாதா ஆலயம் உள்ளது. காரங்காடு கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு செங்கோல் மாதா சொரூபம் கடலில் மிதந்து வந்ததாகவும், அதனை கிராம மக்கள் எடுத்து சிறிய அளவில் ஆலயம் கட்டி வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 1893–ம் ஆண்டு காரங்காடு தனி பங்காக உருவானபோது இந்த கிராமத்தில் பங்கு தொடங்கப்பட்டு சுமார் 125 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

இதையொட்டி 125–வது ஆண்டை கொண்டாடும் விதமாக நினைவு சின்னம் அமைக்க பங்குத்தந்தை சாமிநாதன் மற்றும் கிராம நிர்வாகிகள் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து இங்குள்ள பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் முன்பு சுமார் 70 அடி உயரத்தில் புனித செங்கோல் மாதாவிற்கு மகிமை கோபுரம் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கோபுரத்தின் உச்சியில் சுமார் 10 அடி உயரத்தில் செங்கோல் மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டுஉள்ளது.

இந்த கோபுரத்தில் மாதாவின் அருங்காட்சியகம், திருக்காட்சியகம், குழந்தை மாதா அற்புத கெபி, பழமையான ஆலயமணி ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா முன்னிலை வகித்தார். அனைவரையும் பங்குத்தந்தை சாமிநாதன் வரவேற்றார். விழாவில் ஆயர் சூசைமாணிக்கம் புனித செங்கோல் மாதாவின் மகிமை கோபுரத்தை அர்ச்சித்து திறந்து வைத்தார்.

அதனைதொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கபிரியேல் நாதர் பாஸ்கு கலையரங்கில் நடைபெற்ற 125–வது ஆண்டு ஜூப்ளி நிறைவு விழா திருப்பலியை சூசைமாணிக்கம் தலைமையில் அருட்தந்தையர்கள் இலங்கேஸ்வரன், புஸ்பராஜா, தாமஸ், ரட்சன்யதாஸ், ஆனந்த் ரட்சகன் உள்பட பல்வேறு மறைமாவட்டத்தை சேர்ந்த ஏராளமான அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். இதனையொட்டி செங்கோல் மாதா ஆலயம், மகிமை கோபுரம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் காரங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த இறைமக்கள், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

மேலும் செய்திகள்