தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு: மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மதுரை,
தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 28–ந்தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ கழகத்தின் மதுரை மாவட்ட தலைவர் அமுதன் தலைமை தாங்கினார். செயலாளர் அமானுல்லா, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மதுரை மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் மருத்துவராக பதிவு செய்வதற்கு தகுதி தேர்வு நடத்துவதை ரத்து செய்ய கோரியும், தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.