4 மாதங்களாக குடிநீர் வழங்காததால் கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்
உசிலம்பட்டி அருகே 4 மாதங்களாக தொடர்ந்து குடிநீர் வழங்காததால், கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி ஒன்றியம் திம்மநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது லிங்கப்பநாயக்கனூர். இந்த கிராமத்தில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிதண்ணீரில்லாமல் அருகிலுள்ள விவசாய ஆழ்குழாய் மோட்டாரிலும், அருகிலுள்ள கிராமங்களிலில் இருந்தும் குடிநீர் எடுத்து வருகின்றனர்.
கிராமத்தில் போடப்பட்ட ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீர் உப்பு தன்மை கொண்டதாக உள்ளது. இருப்பினும் அதையும் கிராம மக்கள் உபயோகித்து வந்தனர். கடும் சிரமத்திற்கிடையே உபயோகித்து வந்த உப்புத் தண்ணீரும், ஆழ்குழாய் வற்றியதால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த லிங்கப்பநாயக்கனூர் பெண்கள் உள்ளிட்ட கிராமமக்கள் நேற்று காலை பெரியாரிலிருந்து லிங்கப்பநாயக்கனூர், மற்றும் மொண்டிக்குண்டு, உசிலம்பட்டியிலிருந்து லிங்கப்பநாயக்கனூருக்குள் வந்த அரசு பஸ்களை சிறைபிடித்தனர்.
அவர்களில் பெண்கள் காலிக்குடங்களை பஸ்கள் முன்பு வைத்தபடி நின்று போராட்டம் செய்தனர். தகவலறிந்து வந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, கிராமமக்கள் சிறைபிடித்த அரசு பஸ்களை விடுவித்தும், போராட்டத்தை கைவிட்டும் கலைந்து சென்றனர்.