கடல்வாழ் உயிரினங்கள் கடத்தல் எதிரொலி: கடலோர காவல் குழுமத்தினர் வாகன சோதனை

மணமேல்குடி பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து கடலோர காவல் குழுமத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.;

Update: 2018-07-28 22:45 GMT
மணமேல்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கடற்கரை பகுதிகளான வடக்கு அம்மாபட்டினம், பொன்னகரம், புதுக்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜி பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படுவதாக மணமேல்குடி கடலோர குழுமத்தினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடலோர காவல் குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர், மீன்வளத்துறை உதவி இயக்குனர் குமரேசன், ஆய்வாளர் பாஸ்கர் கொண்ட அதிகாரிகள், கடற்கரை பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கோடியக்கரை கடற்கரை சாலையில் சோதனைச்சாவடி அமைத்து அங்கு செல்லும் வாகனங்களை சோதனை செய்த பின் கடற்கரை பகுதிக்கு செல்ல அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்ட கடலோரப்பகுதிகளில் சில நபர்கள் பணத்திற்காக அரசால் தடை செய்யப்பட்ட கடல்குதிரை, கடல்பசு, கடல் அட்டை ஆகியவற்றை பிடித்து விற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் கடலில் உயிரினங்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனை தடுக்க இந்த சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு நடத்தினோம். ஆனால் இதில் எந்த கடத்தல் பொருளும் சிக்கவில்லை. மேலும் இந்த தீவிர கண்காணிப்பு தொடர்ந்து கடற்கரை பகுதியில் நடை பெறும் என கூறினர். 

மேலும் செய்திகள்