மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கம்ப்யூட்டர் என்ஜினீயர்பலி நண்பர் படுகாயம்

எர்ணாவூர் மேம்பாலத்தில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-07-28 23:15 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சிகாமணி. இவருடைய மகன் ஜெயபாண்டி(வயது 21). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஜெயபாண்டி, பாரதியார் நகரைச்சேர்ந்த தனது நண்பரான ரிக்டர் (25) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து சத்தியமூர்த்திநகருக்கு ஒரு நண்பரை பார்க்கச்சென்றார்.

மோட்டார் சைக்கிளை ஜெயபாண்டி ஓட்டினார். அவருக்கு பின்னால் ரிக்டர் அமர்ந்து இருந்தார். எர்ணாவூர் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பாலத்தின் நடுவில் உள்ள மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த ஜெயபாண்டி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னால் அமர்ந்து இருந்த அவருடைய நண்பரான ரிக்டர், பலத்த காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்