மினிலாரி மோதி டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்து அமுக்கியது வெளியே வர முடியாமல் தவித்த டிரைவர் மீட்பு

ஆரல்வாய்மொழி அருகே மினிலாரி மோதிய விபத்தில் டிரான்ஸ்பார்மர் சரிந்து, மினிலாரி மீது விழுந்து அமுக்கியது. இதனால் மினிலாரியின் கதவை திறந்து வெளியே வர முடியாததால் பரிதவித்த டிரைவர் மீட்கப்பட்டார்.

Update: 2018-07-28 23:00 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே மேற்கு கிறிஸ்து நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), மினிலாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஆரல்வாய்மொழியில் இருந்து செங்கற்களை ஏற்றிக்கொண்டு செண்பகராமன்புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பழத்தோட்டம் பகுதியில் சென்ற போது, அவருக்கு முன்னால் ஒரு மாட்டு வண்டி சென்றது. அந்த மாட்டு வண்டி மீது மோதாமல் இருக்க மினிலாரியை திருப்பினார். இதில் மினிலாரி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது.

மினிலாரி மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மர் பலத்த சேதமடைந்து சரிந்து, அந்த மினிலாரி மீது விழுந்து அமுக்கியது. விபத்து நடந்தவுடன் மினிலாரியில் இருந்த கிளீனர் வெளியே குதித்தார். இதனால், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

அதேநேரத்தில் டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக மினிலாரி மீது விழுந்து அமுக்கியதால், டிரைவர் மினிலாரியின் கதவை திறந்து வெளியே வரமுடியாமல் தவித்தார். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் கிரேன் வரவழைக்கப்பட்டு சரிந்த டிரான்ஸ்பார்மர் அப்புறப்படுத்தப்பட்டது.

இதனால் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மினிலாரியில் இருந்த டிரைவர் மீட்கப்பட்டார். விபத்து நடந்த போது மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு மின்சாரம் தடைபட்டது. இதனால், டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து காயமடைந்த டிரைவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்