கலாம் கண்ட கனவை நோக்கி...
‘‘அப்துல் கலாம் கனவு கண்ட வலிமையான, செழுமையான, துடிப்பான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் நோக்கம்’’ என்கிறார், அருள்ராஜா.;
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த இளைஞரான அருள்ராஜா, கலாம் கனவை நனவாக்குவதற்காக தமிழகம் எங்கும் பயணித்து வருகிறார்.
அவர் சொல்வதைக் கேட்போம்...
சொந்த ஊர்
‘‘பவானி எனது சொந்த ஊர். அப்பா சுவாமிநாதன், தனியார் சர்க்கரை ஆலையில் ஆப்பரேட்டராக வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். அம்மா ஜெயலட்சுமி காதிகிராப்டில் பணிபுரிந்தவர். ஒரே சகோதரி ராணிக்கு திருமணமாகிவிட்டது. நான் பவானியில் உள்ள சக்தி தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படித்தேன். தொடர்ந்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். எனக்கு இயல்பாகவே சமுதாயப் பணியில் மிகுந்த நாட்டம் உண்டு. எனவே நான் கடந்த 2011-ம் ஆண்டு, சமுதாய விழிப்புணர்வு விளம்பர நிறுவனம் என்ற சமூக சேவை நிறுவனத்தைத் தொடங்கினேன்.
கலாமுடன் தொடர்பு
நான் பொறியியல் படிப்பை முடித்தவுடன் நானோ டெக்னாலஜி தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டேன். அப்போது எனக்கு வழிகாட்டியாக இருந்து உதவியவர், நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். அதன் வாயிலாக கலாம் ஐயாவுடன் பழக்கமும் அவரது சிந்தனைகளை அருகில் இருந்து அறியும் வாய்ப்பும் ஏற்பட்டன. அவருடன் டெல்லி வரை பயணிக்கும், ஒன்றாகத் தங்கியிருக்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டியது.
வல்லரசு இந்தியாவுக்காக...
இந்தியாவை வல்லரசாக, எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்கும் நல்லரசாக உருவாக்க வேண்டும் என்பது கலாமின் கனவு. அதைத்தான் தனது ‘இந்தியா 2020’ தொலைநோக்குத் திட்டத்தில் அவர் விளக்கியிருந்தார். அதை நனவாக்கும் முயற்சியாக, தன்னார்வலர்கள் சிலரால் ‘சிஎம்-பிஎம் இந்தியா 2020 விங்’ என்ற அமைப்பு தமிழ்நாடு அளவில் தொடங்கப்பட்டது. பின்னர் இந்திய அளவில் விரிவுபடுத்தப்பட்ட இந்த அமைப்பில் நானும் இணைந்துகொண்டேன். தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
மாணவர் அரசு
இன்றைய மாணவர்கள்தான், நாளைய இந்தியாவின் தூண்கள். அவர்களை சிறந்தவர்களாக, ஒழுக்கமானவர்களாக, முற்போக்குச் சிந்தனையும் நாட்டுப்பற்றும் கொண்டவர்களாக உருவாக்கிவிட்டால் நம் நாட்டின் எதிர்காலம் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. எனவே அந்த நோக்கில், பள்ளி மாணவர்களைக் கொண்ட மாணவர் அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். தன்னார்வத்துடன் முன்வரும் மாணவர்கள், தேசிய மாணவர் படை, தேசிய நாட்டுநலப் பணித் திட்டம், பசுமைப் படைகளைச் சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் சேர்ந்து வருகிறார்கள். இதில் மாணவர்களே நிர்வாகிகள், உறுப்பினர்கள். அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் அனுமதியுடன் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
சமூகநலப் பணிகள்
எங்கள் அமைப்புக்கு என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 22 நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களது வழிகாட்டுதல், உதவியில் மாணவர்கள் செயல்படுகிறார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை வேளாண்மை, பொதுமக்களுக்குத் தேவையான சிறுசிறு உதவிகள் செய்தல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமுதாய நலன் சார்ந்த பல்வேறு விழிப்பு ணர்வுப் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த அமைப்பில் எண்ணற்ற மாணவர்கள் இணைந்திருப்பதும், அவர்கள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அளிக்கும் விஷயங்கள்.
பள்ளிகள், கல்லூரிகளில் தோட்டங்கள்
எங்கள் அமைப்பின் சமூக நலப் பணிகளில் ஒன்றாக, இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விதைத்து வருகிறோம். அதற்கு வழிகாட்டியும் வருகிறோம். அந்தவகையில், பள்ளி, கல்லூரிகள்தோறும் சிறு இயற்கை விவசாயத் தோட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறோம். நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த விவசாயியும், இயற்கை விவசாய ஆர்வலருமான வெங்கடாசலம், இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி தமிழகம் எங்கும் பிரசாரப் பயணம் மேற்கொண்டவர். அவர் எங்களுடன் இணைந்துள்ளார். அவரது உதவியால் நாங்கள் பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாயத் தோட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். அவற்றைப் பராமரிப்பது, உணவுக்கழிவுகளையே உரமாகப் பயன்படுத்துவது, விளைபொருட்களைப் பெறுவது குறித்து நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் இயற்கை விவசாயத்தில் மாணவர்களுக்கு நாட்டத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்காலத்தில் அவர்கள் இதில் சொந்தமாக ஈடுபடும் வகையிலும் தயார் செய்கிறோம்.
பிளாஸ்டிக் ஒழிப்பு
மனித சமூகத்துக்கும், பூமிக்கும் பெரும் கேடாக மாறியிருக்கும் பிளாஸ்டிக் ஒழிப்பில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். இதற்கென ஆங்காங்கே பிளாஸ்டிக் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்திருக்கிறோம். அவற்றில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக், முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இஷ்டம்போல வீசியெறியப்பட்டு, மண்ணையும் தண்ணீரையும் மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கை சேகரித்து அழிப்பதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்துகிறோம். சமீபத்தில்கூட சதுரகிரி மலையில் அப்படி துப்புரவுப் பணி மேற்கொண்டு மூட்டை மூட்டை பிளாஸ்டிக் பைகளை அள்ளி வந்தோம். மாநிலம் தாண்டி கேரளாவிலும் நாங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு, துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். அங்கு எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு, சுற்றுச்சூழலைக் காப்பதில் அம்மக்களுக்கு உள்ள அளவில்லா ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
உதவிக் கரங்கள்
எங்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், வங்கிகள் ஆதரவுக் கரங்களை நீட்டி வருகின்றன. அவர்களது உதவியால் எங்கள் பணியை மேலும் மேலும் விரிவுபடுத்திச் செல்ல முடிகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும், நான் பணிபுரியும் தனியார் நிறுவன உரிமை யாளரின் பெற்றோர் வெங்கட்ராமன்- வசந்தலட்சுமி ஆகியோர் மிகவும் உறுதுணையாக உள்ளனர். தொழிலதிபரும் சமூக சேவகருமான பொள்ளாச்சி மகாலிங்கமும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் கலாம் ஐயாதான். பொதுவாக, நாம் ஒரு சமூகப் பணியில் ஈடுபடும்போது மக்கள் அளிக்கும் உற்சாகமும், உதவியும் மலைப்பூட்டுவதாக இருக்கிறது. உதாரணத்துக்கு நமது சென்னையில் கூட, எங்களின் சமூகப் பணிகளைப் பற்றி அறிந்த சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எங்கள் வாகனங்களுக்கு இலவசமாக பெட்ரோல் போட்டுவிட்டனர்.
ஓடுகிறோம் ஒவ்வொரு நாளும்
சிறுசிறு துளிகள் ஒன்று சேர்ந்துதான் பெருவெள்ளமாய் மாறிப் பாய்கின்றன. அதைப் போல, கரங்கள் அனைத்தும் இணைந்தால், கலாமின் கனவு இந்தியாவை நாம் படைத்துவிடலாம். அந்த இலக்கை மனதில் வைத்து ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்களுடன் பொருளாதார ரீதியாக ஆதரவு கொடுக்கத் தயாராக உள்ளோருடன், பல்துறை வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்திருக்கின்றனர். இவர்கள் எல்லோரது ஒருங்கிணைந்த முயற்சியால், புதிய இந்தியாவைப் படைத்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது!’’
நமக்கும்தான்!