‘டிமேட்’ கணக்கு: அறியவேண்டிய அவசியத் தகவல்கள்
இன்று பலரும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். பங்கு வர்த்தகம் குறித்த பல எதிர்மறைத் தகவல்கள் எப்போதும் உலவிக்கொண்டிருந்தாலும், நிறையப் பேரை இது ஈர்க்கிறது.
பங்குச் சந்தை வர்த்தகம், பெரும்பாலான முதலீடுகளை விடச் சிறந்த வருமானத்தை வழங்குவதும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரும் செல்வத்தைக் குவிப்பதற்கு அனேகம் பேருக்கு உதவியுள்ளதும் உண்மை.
பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஒருவருக்கு டிரேடிங் மற்றும் ‘டிமேட்’ கணக்குகள் தேவைப்படுகின்றன. முந்தைய காலங்களில் பங்குகள் சான்றிதழ் வடிவத்தில் இருந்து வந்தன. ஆனால் தற்போது அவை மின்னணு வடிவத்தில் சேமிக்கப்படுகின்றன. இதனால் பங்குகளைக் கையாளுவதற்கு முன்னர், நீங்கள் ஒரு டிமேட் கணக்கை வைத்திருப்பது தற்போது கட்டாயமாகும்.
ஆனால் ஒரு டிமேட் கணக்கைத் திறப்பதற்கு முன்பு, அதைச் செய்வதற்கு நீங்கள் சில விஷயங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும். அந்த விஷயங்களைப் புரிந்துகொண்டு ஒரு கணக்கை தொடங்குவதற்கு முன், டிமேட் கணக்கு என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
டிமேட் கணக்கு என்பது, என்.எஸ்.டி.எல். (நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்) அல்லது சி.டி.எஸ்.எல் (மத்திய வைப்புத்தொகை சேவைகள் நிறுவனம்) உடன் உங்கள் பங்குகளைச் சேமித்துவைக்கும் ஒரு டெபாசிட்டரி பங்குதாரர் (டி.பி.) உடன் ஒரு மின்னணுக் கணக்கு ஆகும். ஒரு டிமேட் கணக்கு, நீங்கள் விற்பனை செய்யும் வரை சந்தையில் இருந்து நீங்கள் வாங்கும் பங்குகளை வைத்திருக்கிறது.
நீங்கள் ஒரு டிமேட் கணக்கு திறப்பதற்குச் சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அவை பற்றி...
நீங்கள் உங்கள் டிமேட் கணக்கைத் திறக்கும் முன், நீங்கள் உங்கள் கணக்குத் திறக்கும் தரகர் நம்பகமானவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ‘செபி’ (செக்யூரிட்டிஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா) உடன் தரகர் / டி.பி. பதிவு செய்யப்பட்டுள்ளாரா என்பதைச் சரி பார்க்கவும்.
தரகர், ‘செபி’யில் பதிவு செய்யப்பட்டவராக இருந்தால், பிற்காலத்தில் ஏற்படும் எந்த ஒரு மோசடி நடவடிக்கை அல்லது வழக்கு தொடர்பாக புகார் செய்வது எளிது.
அடுத்ததாக, உங்கள் தரகர் ஒரு டெபாசிட்டரி பங்குதாரரா (டி.பி.) என்பதை விசாரிக்க வேண்டும். அவர் வைப்புத்தொகை சேவைகளை வழங்குவது குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கூடுதல் நன்மை. ஏனென்றால், இது நடவடிக்கைகளை இலகுவாக, தொந்தரவு இன்றிச் செய்ய உதவுகிறது. டிமேட் தொடர்பான சிக்கலுக்கு உங்கள் தரகரால் உதவ முடியும். வெளிப்படைத்தன்மை அதிகரித்து, வேலை வேகமாக முடியும்.
தரகர் தங்கள் சேவைகளுக்கு விதிக்கும் பல்வேறு கட்டணங்களைப் பற்றி டிமேட் கணக்கு திறப்பதற்கு முன் முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். மாற்றுக் கட்டணம், வருடாந்திரப் பராமரிப்புக் கட்டணங்கள் மற்றும் பரிவர்த்தனைக் கட்டணம் ஆகியவை சிலவகைக் கட்டணங்கள் ஆகும். மேலும், வருங்காலங்களில் அவர்கள் விதிக்கும் மறைமுகமான கட்டணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
பின்வரும் அம்சங்கள் கொண்ட ஒரு நல்ல வர்த்தகத் தளம் வேண்டும். அதாவது, நிகழ்நேர விலைகள், ஏலம் மூலம் விலை கேட்பது, விற்பது மற்றும் வாங்குவதற்கான வரலாறு, பகுப்பாய்வு நிதி தரவு, தற்போதைய ‘போர்ட்போலியோ’ விவரங்கள், பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் மற்றும் அவற்றின் விவரங்கள்.
மேலே கண்டவற்றுக்கு மேலாக, உங்கள் தரகர் வழங்கியிருக்கும் ஆதரவு சேவைகள் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். நல்ல ஆதரவு சேவைகளை வழங்கும் நம்பகமான தரகர் இருந்தால் சிரமங்களைத் தீர்ப்பதற்கும், விரைவாகச் செயல்படுவதற்கும் உதவிகரமாக இருக்கும்.
இந்தச் சேவைகள் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு போன்றவை சிறந்த வருமானத்தை ஈட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்வேறு அறிக்கைகள், பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத் தரவின் வடிவங்களில் நல்ல ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பொருள் வழங்கும் ஒரு தரகர், சிறந்த வர்த்தகங்களையும் முதலீடுகளையும் செய்வதன் மூலம் சிறந்த லாபங்களைப் பெறுவதில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்க முடியும்.
இங்கு குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் ‘டிக்’ செய்த பிறகு, ஒரு நம்பகமான தரகர் மூலம் ஒரு டிமேட் கணக்கை திறக்கலாம். இது உங்கள் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்குப் பல வழிகளில் உதவிகரமாக இருக்கும்.