பாளையங்கோட்டையில் வங்கியில் கல்விக்கடன் வாங்கி தருவதாக மோசடி; வாலிபர் கைது பெண்கள் உள்பட 6 பேருக்கு வலைவீச்சு

பாளையங்கோட்டையில் வங்கியில் கல்விக்கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Update: 2018-07-28 07:59 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் வங்கியில் கல்விக்கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

கல்விக்கடன்

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 53). இவருக்கு கடந்த 28-5-2018 அன்று சென்னையை சேர்ந்த தீபா என்பவர் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி போனில் பேசினார். அப்போது உலகநாதன் தனது மகனுக்கு வங்கியில் இருந்து கல்விக்கடன் வாங்கி தர கேட்டுக்கொண்டார்.

வாட்ஸ்-அப் நம்பரில் வங்கி கணக்கு புத்தக எண், ஆதார் கார்டு, ஏ.டி.எம்.கார்டு, பான்கார்டு ஆகியவற்றை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு தீபா கூறினார். அதன்படி உலகநாதனும் அனுப்பினார். மேலும் அவருடைய ஓ.டி.பி.நம்பரையும் பேசி வாங்கி உள்ளார். பின்னர் உலகநாதன் வங்கி கணக்கில் இருந்து ரூ.55 ஆயிரம் எடுக்கப்பட்டது. இதன் பிறகு தான் உலகநாதன் தன்னை தீபா, கல்விக்கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததை அறிந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் திருவண்ணாமலை அருகே உள்ள செங்கம் கல்லறைபாடியை சேர்ந்த ராகவன் மகன் மணிகண்டன் (23) என்பவர் உள்பட சிலர் சென்னை சாலிகிராமத்தில் அலுவலகம் அமைத்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

6 பேருக்கு வலைவீச்சு

விசாரணையில், இந்த மோசடியில் பிரேம்குமார் மகன் பிரசன்னா, பரத், தீபா, சத்யா, ஜெயபிரியா, மோனாதேவி ஆகியோரும் மணிகண்டனுடன் சேர்ந்து ஒரு கட்டிடத்தில் கம்ப்யூட்டர் மற்றும் போலியான முகவரியில் செல்போன் சிம்கார்டு வாங்கி ஆன்லைன் மூலம் பணமோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரசன்னா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் செய்திகள்