இந்தத் திருடன் ‘ரொம்ப’ நல்லவன்!

இங்கிலாந்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கடையொன்றில் திருடிய சாக்லேட்டுக்கான பணத்தை அனுப்பி, நெகிழ வைத்திருக்கிறார் ஒரு முன்னாள் ‘திருடர்’.

Update: 2018-07-28 07:25 GMT
இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் உள்ள பெல்லிவேல் ஷாப்பிங் சென்டரில் திருடிய சாக்லேட்டுக்குத்தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் பணம் அனுப்பியிருக்கிறார் குறிப்பிட்ட நபர்.

சமீபத்தில் அந்த வணிக வளாகத்துக்கு ஓர் அனாமதேய கடிதம் வந்தது.

அதில், ‘1975-ம் ஆண்டு நான் சிறுவனாக இருந்தபோது உங்கள் வூல்ஸ்வர்த் கடையில் இருந்து இரண்டு சாக்லேட்களைத் திருடிச் சென்றுவிட்டேன். அதற்காக நான் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அந்த சாக்லேட்டுகளுக்கான பணத்தையும் இத்துடன் அனுப்பியுள்ளேன்’ என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த கடிதத்துடன் ஐந்து பவுண்டு நோட்டு ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது.

வேடிக்கை என்னவென்றால் தற்போது அங்கு வூல்ஸ்வர்த் கடை இல்லை. எனவே அந்தப் பணம் நன்கொடையாக கொடுக்கப்பட உள்ளது.

இது குறித்து கூறிய சம்பந்தப்பட்ட ஒருவர், ‘‘இந்தக் காலத்தில் இப்படி ஒரு நல்ல விஷயத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தக் கடிதத்தை அனுப்பியவருக்கு பெல்லிவேல் வணிக வளாகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது மன்னிப்பையும் ஏற்றுக் கொள்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார். 

மேலும் செய்திகள்