மலிவு விலை பறக்கும் கார்!
மலிவு விலையிலான பறக்கும் கார், அமெரிக்காவில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
‘பிளாக் பிளை’ எனப்படும் இந்தப் பறக்கும் கார், மணிக்கு 99.7 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து 40 கி.மீ. வரை செல்லும்.
இதுபோன்ற பறக்கும் கார்கள் முன்பே வந்திருந்தாலும், அவற்றின் விலை மிக அதிகம். ஆனால் இந்தப் புதிய ‘பிளாக் பிளை’ கார்கள் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வெகிக்கிள் எனப்படும் எஸ்.யூ.வி. மாடல் விலையிலேயே இருக்கும். அதுமட்டுமல்ல, இந்தக் கார்களை இயக்குவதற்கு விமான ஓட்டிக்கான உரிமம் தேவையில்லை.
ஓபனர் நிறுவனம் இந்த பிளாக் பிளை காரை வடிவமைத்துள்ளது. இதன் சோதனை ஓட்டம் கனடாவில் நடந்துவிட்டது. அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையமும் இந்தப் பறக்கும் காருக்கு அனுமதி அளித்துள்ளது.
கூகுளின் இணை நிறுவனர் லாரி பேஜின் பின்புலத்தில் இயங்கும் கிட்டி ஹாக் ஸ்டார்ட் அப் நிறுவனமும் இதுபோன்ற பறக்கும் கார்களின் சோதனை ஓட்டத்தை அமெரிக்கா லாஸ் வேகாசில் நடத்தி உள்ளது.
உலகெங்கும் பல நிறுவனங்கள் இந்த வகை வாகனத் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன.
ஒருவர் மட்டுமே பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பறக்கும் காரை, புல் தரையிலிருந்து கூட டேக் ஆப் செய்து, அது போன்ற நிலத்திலேயே தரையிறக்கலாம்.
‘‘இதுபோன்ற வாகனத்தை நான் பார்த்ததே இல்லை, மிகச் சிறப்பாக உள்ளது’’ என்று இத்துறை சார்ந்த அமைப்பு ஒன்றின் இயக்குநர் டார்ரென் பிளேசன்ஸ் கூறுகிறார்.
இந்த வாகனத்துக்கு விமான ஓட்டி உரிமம் தேவையில்லைதான். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதை ஓட்டச் சில பிரத்தியேகப் பயிற்சிகள் எடுக்க வேண்டும், சில தேர்வுகள் எழுத வேண்டும் என்கிறது ஓபனர் நிறுவனம்.
ஆனால், விமான ஆணையம் இந்த வகை பறக்கும் கார்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை நிர்ணயித்துள்ளது.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹில்லர் விமான அருங்காட்சியகத்தின் தலைவர் வில்லி டேர்னர், விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இதுபோன்ற புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்கிறார்.
இந்தப் பறக்கும் கார் விபத்தில் சிக்குமா என்ற கேள்விக்கு, ‘‘விபத்து ஏற்படலாம். சாலையில் தினம் தினம் விபத்து நடக்கிறதுதானே?’’ என்கிறார் டேர்னர்.
‘பிளாக் பிளை’ குறையே இல்லாததாக இருக்காது என்றபோதிலும், முந்தைய பறக்கும் கார்களைவிட மேம்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
எதிர்காலத்தில், எல்லோருமே பறக்கும் காரில் பறக்கலாம்!