ஆன்-லைனில் வீடுகள் விற்பனை
வீடு விற்க, வாங்க தரகர்களை நாடுவதைவிட இணைய தளங்களை நாடும் போக்கு மக்களிடம் அதிகரித்து விட்டது.
இன்று வீடுகள் விற்பனை குறித்த தகவல்கள் இணைய தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. வீடு வாங்குவோர் செய்யும் முதல் காரியமே இணைய தளங்களில் தேடுதல் வேட்டையை தொடங்குவதுதான். இதைக் கருத்தில் கொண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் புதிய புதிய இணைய தளங்களைத் தொடங்கிய வண்ணம் உள்ளன. தரகர்களை தவிர்ப்பதை தாண்டி, ஒரே தேடுதலில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளை இணைய தளங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தரகர் மூலம் என்றால், சில வீடுகளை நேரடியாக காட்டுவார்கள். பிடிக்கவில்லையென்றால் சில நாட்கள் கழித்து மீண்டும் சில வீடுகளைக் காட்டுவார்கள். இதுவும் தற்போது பொதுமக்கள் இணைய தளங்களை நாட முக்கிய காரணம்.
அதற்கேற்ப, ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் தங்கள் வீட்டுத் திட்டங்களை இணையதள நிறுவனங்கள் மூலமாக அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன. இணையம் மூலமாக வீடுகளை விற்கவும் முயன்று வருகின்றன. இந்தியாவில் வீடுகள், வீட்டு மனைகள் வாங்குவது தொடர்பாக தங்கள் தளத்தில் ஆண்டுதோறும் 80 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையதளம் மூலம் வீடுகளை விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்களை எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. இணையதளம் மூலம் வீடு தேடும் செலவுகள் மிகவும் குறைவு. தற்போது கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் மூலம் எல்லா நேரமும் இணைய தள சேவையைப் பயன்படுத்தும் வசதி அதிகரித்துள்ளது. இருக்கும் இடத்தில் இருந்தபடியே சேவைகளைப் பெறும் வகையில் வாழ்க்கை முறையும் மாறியிருக்கிறது. ஆன்-லைன் வர்த்தக முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சொத்துகளை இணையதள சேவை மூலம் வாங்குவதும் அதிகரித்துள்ளது. சொத்துகளை வாங்குவது மட்டுமின்றி, வீட்டுக் கடன் வசதி, சட்ட உதவி, ஆவணங்கள் சரிபார்க்க உதவி என பல உதவிகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் சொத்துகளைத் தேடி ஆராயும் அளவுக்கு ஆன்-லைனில் பல விதமான தேடுபொறிகள் உள்ளன. இடத்தை தேர்வு செய்யவும், மதிப்பைத் துல்லியமாக அறியவும் ஆன்-லைனில் முடியும். நாம் வாங்க விரும்பும் அடுக்கு மாடி வீட்டை முப்பரிமாணத்தில் பார்க்கலாம். இது போன்ற வசதிகளும் ஆன்-லைனில் வாடிக்கையாளர்கள் வீடு வாங்க ஒரு காரணம்.