அ.தி.மு.க. வெற்றி பெற இப்போதே பணிகளை தொடங்கி விடுங்கள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற இப்போதே பணிகளை தொடங்கிவிடுங்கள் என்று ஆரணி தொகுதி அ.தி.மு.க.ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசினார்.;

Update:2018-07-28 06:43 IST
ஆரணி,

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில் நகர அ.தி.மு.க. சார்பில் ஆரணி சைதாப்பேட்டை கே.பி.கே.ஜானகிசம்பத் திருமண மண்டபத்திலும், ஆரணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சேவூர் ஊராட்சி பி.என்.எம்.என். திருமண மண்டபத்திலும், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் குண்ணத்தூர் கூட்ரோட்டில் உள்ள மகேஸ்வரி திருமண மண்டபத்திலும் தனித்தனியே கட்சி செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

செஞ்சி வி.ஏழுமலை எம்.பி., முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி கே.ராமச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர் விமலாமகேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ரமணிநீலமேகம், டி.கருணாகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேவூர் ஜெ.சம்பத், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குமுதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வேட்பாளராக நின்றாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் 6-வது இடத்தில் ஆரணி எம்.பி செஞ்சி வி.ஏழுமலை 2 லட்சத்து 48 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல வரும் தேர்தலிலும் நமது வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.

அதற்கு இப்போதே பணிகளை தொடங்கி விடுங்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டிக்கு 18 நபர்களை நியமனம் செய்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைகளையும், தேவைகளையும் தகவல் தாருங்கள் உடனடியாக நிறைவேற்றி தருகிறோம். நமது மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரத்து 500 உறுப்பினர் படிவங்கள் கடந்தமுறை வழங்கப்பட்டுள்ளது. இம்முறை சுமார் 13 ஆயிரம் உறுப்பினர் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆரணியில் கலந்துகொண்டு மாவட்டம் முழுவதும் தொகுதிக்கு 300 சைக்கிள்கள் வீதம் 8 தொகுதிகளில் இருந்து 2,400 பேர் கலந்துகொள்ளும் மாபெரும் சைக்கிள் பேரணியில் ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்து கண்டிப்பாக கூடுதலாக வரவேண்டும்.

ஆரணி சட்டமன்ற உறுப்பினராக என்னை வெற்றிபெற செய்த தொகுதி மக்களுக்காக ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஆரணி கல்வி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆரணியில் புதிதாக மோட்டார் வாகன அலுவலகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆரணி மின்வாரிய புதிய பகிர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நகர மக்கள் நலன் கருதி ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ.1 கோடி செலவில் நடைபயிற்சி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுகூட ரூ.4 கோடியே 66 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனைக்கு அடுக்குமாடி கட்டிடங்கள், புதிய வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய ஆற்று தரைப்பாலத்தை மாற்றி ரூ.16 கோடி செலவில் ஆற்று மேம்பாலம் அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை அனைத்துப் பிரிவு பொறுப்பாளர்களும், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். முடிவில் நடராஜன், பாரி பி.பாபு, சேவூர் கே.பெருமாள், ஆர்.குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்