வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

பவுர்ணமியை முன்னிட்டு வெயிலையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2018-07-28 01:06 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை மக்கள் சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக சித்ரா பவுர்ணமி, தீபத்திருவிழா ஆகிய நாட்கள் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும்.

ஆடி மாதத்திற்கான கிரிவலம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.25 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கூட்டம் குறைவாக தான் இருந்தது. நள்ளிரவு கூட்டம் கொஞ்சம் கூடியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். அப்போது பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில் வழிபாடு செய்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கிரிவலம் சென்றனர். மாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்ல தொடங்கினர். கிரிவலத்தை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சில இடங்களில் பேரிகார்டுகள் வைத்து போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினர்.

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சந்திர கிரகணத்தை யொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு மற்றும் பூஜையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பக்தர்கள் வழக்கம் போல் கிரிவலம் சென்று வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்