கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-28 01:03 GMT
திருவண்ணாமலை,

போளூர் தாலுகா கல்வாசல் கிராமம் கருங்காலிகுப்பத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சீரான குடிநீர் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘போளூர் தாலுகா கருங்காலிகுப்பத்தில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்து வந்த 2 ஆழ்துளை கிணறுகளில் ஒன்றில் சுத்தமாக நீர்வரத்து நின்று விட்டது. மற்றொரு ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் போதிய குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை’ என்றனர்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்கள் சென்று கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் குடிநீர் பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ள அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல எங்கள் கிராம மக்கள் குடும்பங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்ய உள்ளோம் என்று கூறி இருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்