மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Update: 2018-07-28 00:41 GMT
நாசிக்,

மராட்டியத்தில் மராத்தா சமுதாயத்தினர் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர்.

அவர்களது போராட்டத் திற்கு ஆதரவாக கன்னட் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்ஷ்வர்தன் ஜாதவ், வைஜாப்பூர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பாவுசாகிப் சிகத்காவ்கர், பண்டர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே மற்றும் நாசிக் மாவட்டம் சந்த்வாட் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகுல் அகெர் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான தத்தாராயா பார்னே நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்தாப்பூர் தொகுதியை சேர்ந்த இவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகருக்கும், கட்சியின் தலைவர் அஜித்பவாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “வாய்மொழியாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதி அளித்தபோதிலும், எழுத்து மூலமாகவும் அவர் உறுதி அளிக்க வேண்டும். இதுநாள் வரை இடஒதுக்கீடு குறித்து உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படாதது, மிகவும் தீவிரமான பிரச்சினையாகும்” என்றார்.

இதேபோல் பா.ஜனதாவை சேர்ந்த நாசிக் மேற்கு தொகுதி பெண் எம்.எல்.ஏ. சீமா ஹய்ரே என்பவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் மூலம் மராத்தா போராட்டத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்