தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு, அமைச்சர் கந்தசாமி அதிரடி

50 மைக்ரான் அளவுக்கு குறைவான அளவில் பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்த தொழிற்சாலைக்கு அமைச்சர் கந்தசாமியின் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது.

Update: 2018-07-27 23:45 GMT

புதுச்சேரி,

புதுவையில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகிறார்கள். ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் அமைச்சர் கந்தசாமி நேற்று அதிகாரிகளுடன் வெள்ளாழ வீதி, ரங்கப்பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 50 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகரிகள் முடிவு செய்துள்ளனர். அமைச்சர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்வதை அறிந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிலர் கடைகளை மூடிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்த சோதனையை தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

தடையை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். அக்டோபர் 1–ந்தேதி முதல் இந்த தடை உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படும். அதன்பின் இதுபோன்ற பொருட்களை விற்கும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்.

மேலும் பயன்பாட்டிற்கு பின்னர் பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்பவர்களுக்கே விற்பனை உரிமம் வழங்கப்படும். இதுதொடர்பாக ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறை அதிகாரி தலைமையில் காவல்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழு அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

தொடர்ந்து அவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைக்கு சென்று தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டார். இதை அறிந்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் அவசரம் அவசரமாக மூடப்பட்டன. வெளியே பூட்டு போட்டு இருந்த நிலையில் ஒரு தொழிற்சாலையில் உள்ளே வேலைகள் நடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கதவினை திறக்குமாறு அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து அந்த தொழிற்சாலையின் கதவு திறக்கப்பட்டது. இதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பெண் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் கவர்களை உற்பத்தி செய்வது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் கவர்கள் 50 மைக்ரான் அளவுக்கும் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி உத்தரவின்பேரில் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்