அரசின் திட்டங்களை எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Update: 2018-07-27 23:00 GMT

போத்தனூர்,

பாராளுமன்ற தேர்தலையொட்டி கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சுந்தராபுரம் செங்கப்பகோணார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்கு குறிச்சி நகர செயலாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். இதில் புறநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. எனவே பொள்ளாச்சி பாராளுமன்றத்துக்கு உட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஒரு கமிட்டிக்கு நியமிக்கப்படும் 18 பேரில் ஒவ்வொருவரும் 50 வாக்காளர்களை சந்தித்து அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லி அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும்.

மக்களுக்கு பலன் அளிக்கும் திட்டங்கள் என்னென்ன நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை தொண்டர் கள் பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்குகள் கேட்க வேண்டும். இதேபோல மண்டல கமிட்டி, பகுதி கமிட்டியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த பணியை இப்போதே தொண்டர்கள் தொடங்கி விட வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை முறையாக செய்வதின் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்