குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

நெல்லுக்கு மத்திய அரசு போதிய விலை அறிவிக்காததை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும் விவசாயிகள் தென்னை மட்டையால் வயிற்றில் அடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-07-27 22:19 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜகோபால், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜஸ்டின், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஏகாம்பரம், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனிசவுந்தர்யா, காவிரி செயற்பொறியாளர் முகமதுஇக்பால், கூட்டத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சங்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலைவிமல்நாதன் தலைமையில் விவசாயிகள் வயிற்றில் நாமம் போட்டவாறு மத்திய அரசு நெல்லுக்கு போதிய விலை அறிவிக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர். ஒரு சில விவசாயிகளை தவிர மற்ற விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.


முன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மட்டையால் வயிற்றில் அடித்துக்கொண்டு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரியும், கையில் அச்சுவெல்லத்தை எடுத்துக்கொண்டும் வந்தனர்.

அப்போது அவர்கள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் அதிகாரிகள், தங்கள் வயிற்றில் அடிப்பதாகவும், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், கடைமடைக்கு தண்ணீர்வரவில்லை. இதையடுத்து அதிகாரிகளுக்கு அச்சுவெல்லம் வழங்குவதாகவும் கூறிக்கொண்டு எடுத்து வந்தனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தென்னைமட்டை, அச்சுவெல்லத்தை எடுத்துச்செல்லக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து அவற்றை வெளியே வைத்து விட்டு உள்ளே சென்றனர்.

பின்னர் கலெக்டரிடம் அவர்கள், அதிகாரிகள் கல்லணைக்கால்வாயை சரியாக பராமரிக்காததால் தான் உடைப்பு ஏற்பட்டது. தண்ணீர் இன்னும் கடைமடை பகுதியை சென்றடையவில்லை. கொள்ளிடத்தில் அதிகமாக தண்ணீர் திறப்பதால் கடலில் தான் சென்று கலக்கிறது. அதிகாரிகள் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களும் வெளிநடப்புசெய்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 1,250 டன் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், உரங்கள், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை பயிர்கள் 426 எக்டேர் சாகுபடி பரப்பளவு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நடப்பாண்டு 252 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 21 கோடியே 96 லட்சத்து 32 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 338 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கல்லணைக்கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும்பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்