வாடகை குடியிருப்புக்கான சொத்து வரி உயர்வு: தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் உள்ள வாடகைதாரர் குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நீலகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-07-27 23:00 GMT

ஊட்டி,

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் உள்ள வாடகைதாரர் குடியிருப்புகளுக்கு 100 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதை கண்டித்து தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் வாடகை குடியிருப்புக்கான சொத்து வரி 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்படும் என நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவித்தது.

இருப்பினும் ஏற்கனவே அறிவித்தவாறு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சி அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் நகராட்சி அலுவலகங்கள் முன்பு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் பஸ் நிலைய பகுதியில் நடத்த அனுமதி அளித்தனர்.

ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் முன்பு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பா.முபாரக் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான கா.ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் முஸ்தபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் செல்வரத்தினம், மகேஷ், ரெனால்டு, ஜபருல்லா, நாகேஷ்வரி, ஜெயக்குமார், ரசாக், மூர்த்தி, சுப்பிரமணி, பாபு, தாஹீர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பந்தலூர் பஜாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லியாளம் நகர செயலாளர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். அதில் உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பந்தலூர் ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்