நர்சு தூக்குப்போட்டு தற்கொலை உறவினர்கள் சாலைமறியல்

தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-27 22:08 GMT
வேலூர், 


காட்பாடியை அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருடைய மகள் ஜெனிபர் (வயது 23). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஜெனிபர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டுக் கொண்டார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஜெனிபர் பணிபுரியும் மருத்துவமனைக்கே சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஜெனிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்- காட்பாடி சாலையில் மாலை 4 மணி அளவில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு மருத்துவமனைக்குள் சென்றனர். மறியல் போராட்டம் சுமார் ½ மணி நேரம் நடந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெனிபரின் குடும்பத்தினர் கூறுகையில், ஜெனிபர் 2 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றினார். இவருக்கு கடந்த 1 மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் அடிக்கடி எங்களிடம் கூறுவார். இந்த நிலையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெனிபர் போன்று வேறு யாருக்கும் இந்த நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் மறியல் போராட்டம் செய்தோம் என்றனர்.

தொடர்ந்து லத்தேரி போலீசார் மருத்துவமனைக்கு வந்து குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்