எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி யாருக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனை 4 அமைச்சர்கள் நேற்று பார்வையிட்டனர்.
கடலூர்,
மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு பெருமையும், புகழும் சேர்க்கின்ற விதமாக, அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும். அந்த நினைவு மண்டபத்திலே அவருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புனித கார்மேல் அன்னை ஆலயத்துக்கு எதிரேயுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த இடத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன்பிறகு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்டத் தியாகியும், சமூக நீதிக்காக பாடுபட்டவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டும், அவருடைய பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும், அவர் பிறந்த கடலூர் மாவட்டத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் பேரில் முதல்-அமைச்சரின் ஆணைக்கேற்ப இன்றைய தினம்(அதாவது நேற்று) கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான இடத்தை நாங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.
இங்கு எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்காக 1 ஏக்கர் 70 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ்6 மாத காலத்திற்குள் நினைவு மண்டபம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் நகரின் மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கண்டு பயன்பெற ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்களுக்கு எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் மகன் எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எனது தந்தையின் பிறந்தநாள், நினைவு நாளுக்கு அமைச்சர்களை அனுப்பி தந்தையின்சிலைக்கு மாலை அணிவிக்க செய்து கவுரவித்து வந்தார். அவரது மறைவுக்குப்பின் இந்த ஆட்சியும் எனது தந்தையின் பிறந்தநாள்விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு எனது தந்தைக்கு நினைவு மண்டபமும் கட்டப்படும் என அறிவித்து பெருமை சேர்த்து உள்ளது. எனவே இந்த ஆட்சி ஜெயலலிதாவின் வழியில் நடக்கிற நல்லாட்சி என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும் என்றார்.
கலெக்டர் தண்டபாணி கூறுகையில், நினைவு மண்டபத்துக்கான வடிவமைப்பை பொதுப்பணித்துறையினர் தயார் செய்ய உள்ளனர். நினைவு மண்டபத்தின் வடிவமைப்பு தயாரானதும் திட்டமதிப்பீடு தயாரிக்கப்படும். அதன்பிறகு அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். நினைவு மண்டபத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாரின் முழு உருவ சிலையும், நூலகமும், பூங்காவும் அமைக்கப்படும் என்றார்.
அப்போது ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.குமரகுரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் சப்-கலெக்டர் சரயு, கடலூர் நகராட்சி ஆணையாளர் சரவணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் குமரன், சேவல்குமார், பழனிசாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், கந்தன், ராஜ், பாலகிருஷ்ணன், தமிழ்செல்வன், ஏழுமலை உள்பட பலர் உடன் இருந்தனர்.