மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்

ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு கிராம மக்கள் மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-27 22:15 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 4 கிராம மக்கள் இணைந்து வழிபடும் வண்டி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இதன் எதிரே 2 ஆயிரம் பேர் படிக்கும் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது. இந்த கோவிலுக்கு பின்புறம் மதுபான கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். இதற்கு தொடக்கத்தில் இருந்தே கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் போலீசார், தாசில்தார் மற்றும் கலெக்டர் என அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு, கடைக்கு மதுபான பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கடையை திறக்க ஏற்பாடு நடந்துள்ளது. இதையடுத்து ஆவேசமடந்து நேற்று ஏராளமானோர் திரண்டு மதுபானக்கடை அமையவுள்ள இடத்தின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். எதிர்ப்பை மீறி கடை தொடங்கும் பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்