தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிய கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்கவில்லை, மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்கவில்லை என்று இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-07-27 23:00 GMT

மதுரை,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தொடர்பாக சிப்காட் போலீஸ் நிலையத்தில் 142 வழக்குகளும், தூத்துக்குடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100 வழக்குகள் உள்பட மொத்தம் 242 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் நடந்த ஒரே ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்த நிலையில் அதே போராட்டம் தொடர்பாக மீண்டும் 242 வழக்குகள் பதிவு செய்யப்படடன.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிப்காட் போலீசார் பதிவு செய்துள்ள குற்ற வழக்கு எண் 191–ஐ தவிர மற்ற 242 வழக்குகளையும் ரத்து செய்து, அந்த வழக்குகளை போலீசார் விசாரிக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதவிர, துப்பாக்கி சூடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதாடுகையில், “100–வது நாள் போராட்டத்துக்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் நிர்வாகம் ஐகோர்ட்டில் 144 தடை உத்தரவு பெற்றது ஏன்? தூத்துக்குடியை சுற்றிலும் 7 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் ஸ்டெர்லைட் சார்பில் மனு அளித்தது ஏன் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. மேலும், இந்த வழக்குகளை முடித்துவைக்காமல் உரிய நிவாரணம் கிடைக்கும் வரை தொடர்ந்து விசாரிக்க வேண்டும்“ என்று வாதாடினார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்