வீடு புகுந்து திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி

வத்தலக்குண்டுவில் தொடர் திருட்டு நடந்து வரும் நிலையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-07-27 22:15 GMT
வத்தலக்குண்டு,


திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கடைவீதியில் உள்ள ஜவுளிக்கடையில் கடந்த 24-ந்தேதி பகலில் சேலைகள் திருடு போனது. இதையடுத்து கடை ஊழியர்கள், ஆண் வேடமிட்டு வந்த விக்கிரமங்கலத்தை சேர்ந்த ராணியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அன்று இரவு வத்தலக்குண்டு எழில் நகரில் உள்ள யோகா பயிற்சி மைய கதவை மர்மநபர்கள் உடைத்து உள்ளே புகுந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள புரொஜக்டரை திருடி சென்றனர். 25-ந்தேதி இரவு வத்தலக்குண்டு நடுத்தெருவில் விஸ்வநாதன் என்பவர் வீட்டுக்குள் புகுந்த டவுசர் அணிந்த திருடர்கள் அவர் மனைவி விஜயலட்சுமி அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.

வத்தலக்குண்டு நடுத்தெருவில் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை ஊழியரான ஆறுமுகம் என்பவரது வீடு உள்ளது. அவரும் அவர் மனைவியும் மகனை பார்க்க சென்னை சென்று இருந்தனர். இதையறிந்த திருடர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை கம்பியால் நெம்பி உடைத்து பீரோக்களில் இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். ஆறுமுகம் சென்னையிலிருந்து திரும்பிய பிறகே திருடு போனவை பற்றிய முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்கள் வத்தலக்குண்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் வத்தலக்குண்டுவில் மீண்டும் ஒரு திருட்டு முயற்சியும் அதில் ஈடுபட்ட நபர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

வத்தலக்குண்டுவில் உள்ள வெங்கிட்டாபட்டியை சேர்ந்தவர் காசி. மின்வாரிய ஊழியர். நேற்று மாலை இவரது மனைவி சிவகாமி வீட்டை பூட்டி விட்டு அதன் சாவியை மேற்கூரையில் சொருகி வைத்து விட்டு அருகே உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளை அழைத்து வர சென்று இருந்தார். அப்போது அதை கவனித்து கொண்டு இருந்த ஒரு வாலிபர் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அவர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து திருட முயன்றார்.

இந்த சமயத்தில் காசி திடீரென வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் ஒரு வாலிபர் நிற்பதை அறிந்த அவர் திருடன்....திருடன் என கூச்சல் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை பிடித்து கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் விக்கிரமங்கலத்தை சேர்ந்த கணேசன் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு அடி நீள கத்தியும், மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் வத்தலக்குண்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்