நாடு முழுவதும் இன்று ஒருநாள் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை தேர்வு தலைவர் அறிக்கை

தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் டாக்டர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தேர்வு தலைவர் டாக்டர் சி.என்.ராஜா தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Update: 2018-07-27 22:45 GMT

ஈரோடு,

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை தேர்வு (2109) தலைவர் டாக்டர் சி.என்.ராஜா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தேசிய மருத்துவ கமி‌ஷன் மசோதா 28–ந் தேதி (இன்று) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவில் மக்களையும் மருத்துவத்துறையையும் பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு மத்திய அரசால் தேர்ந்து எடுக்கப்பட்ட 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ கமி‌ஷன் குழு அமைக்கப்படும். இதில் 5 பேர் மட்டுமே டாக்டர்கள். இவர்கள் பகுதிநேர உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள். டாக்டர்கள் அல்லாத உறுப்பினர்கள் 20 பேரை மத்திய அரசு நியமனம் செய்யும். 60 பேர் கொண்ட மருத்துவ ஆலோசனைக்குழுமம் அமைக்கப்பட்டு, அந்த 60 உறுப்பினர்களும் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். மருத்துவ கல்வி பராமரிப்புக்காக 4 குழுமங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழுமத்திலும் 3 பேர் கொண்ட குழுவினர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். இந்த குழுமங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

மத்திய அரசு அமைக்கும் இந்த குழுக்கள்தான் மருத்துவக்கல்வி, மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகளை கண்காணிக்கும்.

ஆங்கில மருத்துவம் செய்யும் அலோபதி டாக்டர்கள் இல்லா பிற மருத்துவ பிரிவுகளான ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படித்த மருத்துவர்களும் தேசிய மருத்துவ கமி‌ஷனில் இடம் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி பிரிட்ஜ் எனப்படும் 6 மாத பயிற்சியை பெற்றால் எம்.பி.பி.எஸ். படிக்காத மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு மருத்துவ சிகிச்சையில் பெரும் ஆபத்தை விளைவிக்கும் அம்சமாக இருக்கிறது. இது போலி டாக்டர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிப்பது போன்ற நடவடிக்கையாக இருக்கிறது.

தனியார் மருத்துவக்கல்லூரிகள் எந்தவிதமான தர நிர்ணயமும் இல்லாமல் தாங்களாகவே எம்.பி.பி.எஸ். மருத்துவப்படிப்பு, மருத்துவ உயர்படிப்புகளுக்கான இடங்களை அதிகரித்துக்கொள்ள முடியும். தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், அரசுக்கு 85 சதவீதம் இடமும் என்ற விகிதம் மாற்றப்பட்டு அரசுக்கு 40 சதவீதமும், தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு 60 சதவீத இடமும் ஒதுக்கப்படும். இதன் மூலம் தரமற்ற மருத்துவக்கல்லூரிகள் உருவாகும். இது நாட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்வினை சூறையாடுவதாகும். மேலும் மருத்துவக்கல்வி சாமானிய மக்களுக்கு கிடைக்காத நிலை ஏற்படுவதுடன் பெரிய அளவிலான ஊழலுக்கும் வழிவகுக்கும்.

புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க கடுமையான சட்டத்திட்டங்கள் எதுவும் இல்லாத அதிகாரத்தை, தேசிய மருத்துவ கமி‌ஷன் அளிக்கிறது. மருத்துவம் படிக்காதவர்கள் அறுவை சிகிச்சை செய்யவும், மருத்துவம் செய்யவும் தேசிய மருத்துவ கமி‌ஷன் சர்வாதிகாரமாக அதிகாரம் அளிக்க முடியும். இது ஊழலுக்கு வழிவகுப்பதுடன், நாட்டு மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு வழிவகை செய்கிறது.

எனவே இந்த மசோதாவை முழுமையாக எதிர்ப்பது என்று கடந்த ஆண்டு (2017) டிசம்பர் மாதம் 27 மற்றும் 28–ந் தேதிகளில் மும்பையில் நடந்த இந்திய மருத்துவ கழக தேசிய மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 2–ந் தேதி நாடு தழுவிய டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. உடனடியாக 28 எம்.பி.க்கள் கொண்ட நிலைக்குழு அமைக்கப்பட்டது. இந்த நிலைக்குழுவில், இந்திய மருத்துவ சங்கம் மசோதாவை எதிர்ப்பதற்கான காரணங்களை எடுத்துக்கூறி பொதுமக்கள், மருத்துவத்துறையை பாதிக்கும் 24 அம்சங்களை திருத்தவும், நீக்கவும் பரிந்துரை செய்தது. அதனை நிலைக்குழு எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தனர். ஆனால் ஒரே ஒரு கோரிக்கை தவிர மற்ற எதிலும் மாற்றம் இல்லாமல் பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்து 75 ஆயிரம் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தமிழ்நாட்டில் இந்திய மருத்துவ சங்கத்தில் பதிவு பெற்ற 32 ஆயிரம் டாக்டர்களும், 15 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன. வேலை நிறுத்த போராட்டம் 28–ந் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். இந்த நேரத்தில் புறநோயாளிகள் யாரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருத்துவம் செய்ய மாட்டார்கள். அவசர சிகிச்சை, மகப்பேறு ஆகிய உயிர்காக்கும் பிரிவுகள் மட்டும் செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் சி.என்.ராஜா கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்