கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு
சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.;
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மகள் சர்மிளா (வயது 10). இவள் சிங்காரபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கொல்லகொட்டாயில் உள்ள விவசாய நிலம் பக்கமாக மாணவி சர்மிளா நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக அவள் தவறி விழுந்தாள். சர்மிளாவுக்கு நீச்சல் தெரியாததால் அவள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.