பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: லாரி டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ராசிபுரத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் லாரி டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2018-07-27 21:45 GMT
நாமக்கல்,


நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 14 வயது மகள் ராசிபுரம் அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ராசிபுரம் அருகே உறவினர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி அவர் மாயமானார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அணைப்பாளையத்தை சேர்ந்த செல்வம் மகன் லாரி டிரைவரான விஜயகுமார் (வயது 27), மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.

பின்னர் 2015-ம் ஆண்டு மே 9-ந் தேதி ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் விஜயகுமாரை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விஜயகுமார் மாணவியை ஓசூருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, பள்ளி மாணவியை கடத்தி சென்றதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், பலாத்காரம் செய்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதை ஏககாலத்தில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக அனுபவிக்கவும், ரூ.5 ஆயிரம் அபராதத்தை செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்