மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ரூ.158 கோடியே 64 லட்சத்தில் நடைபெற்று வரும் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் 2 மாதத்தில் முடிவடையும் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் வனவாசியில் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி திறப்பு விழா, மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று பல்வகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடந்தது.
விழாவுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் விவேகானந்தன், பன்னீர்செல்வம் எம்.பி., கலெக்டர் ரோகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் வரவேற்றார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரியை திறந்து வைத்தார்.
மேலும் மாணவ, மாணவிகளிடம் முதலாமாண்டு சேர்க்கையான பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அவர் பெற்றார். இதையடுத்து 1,278 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:-
கல்வித்துறைக்கு மற்ற துறையை காட்டிலும் இந்த அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் மையமாக உள்ள இந்த வனவாசி பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி கட்ட கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இந்தாண்டு திறந்து வைக்கப்பட்டது.
எட்டிகுட்டைமேடு பி.எட். கல்லூரி கட்டிக்கொண்டிருக்கிறோம், அடுத்த ஆண்டு திறக்கப்படும். எட்டிகுட்டைமேட்டில் சிட்கோ தொழிற்பேட்டையும் இன்னும் ஓராண்டில் திறக்கப்படும். ரூ.158 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் மேச்சேரி, நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்னும் 2 மாதத்தில் இந்த பணிகள் முடிவடைந்து மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அனைத்திற்கும் பாதுகாக்கப்பட்ட நிலையான காவிரி தண்ணீர் வழங்கப்படும். இந்த ஆண்டு ரூ.328 கோடி குடிமராமத்து திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. விவசாயிகளே இந்த பணியை மேற்கொள்வார்கள், டெண்டர் கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், ராஜா, சின்னதம்பி, மருதமுத்து, சித்ரா, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், நங்கவள்ளி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எமரால்டு வெங்கடாசலம், ஒன்றிய அவை தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கொங்கணாபுரத்தில் புதிய போலீஸ் நிலையம், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 728 போலீசார் பணியில் உள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 32 ஆயிரத்து 905 போலீசார் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 11,508 காலி பணியிடங்கள் உள்ளன.
நில அபகரிப்பு பற்றி விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இதில் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட பலர் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நில அபரிகரிப்பு தடுப்பு பிரிவு மூலம் இதுவரை 3,203 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.3,647 கோடி மதிப்பீட்டில் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
குற்றங்களை தடுக்க பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அட்மா திட்டக்குழு தலைவர் கரட்டூர் மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், எடப்பாடி நகர்மன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், பூலாம்பட்டி பாலு, ஆவின் துணைத்தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.