லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் 26 ஆயிரம் டன் உரம் தேக்கம் விவசாயிகளுக்கு சிக்கல்

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 26 ஆயிரம் டன் உரங்கள் தேங்கி உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.;

Update: 2018-07-27 21:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 26 ஆயிரம் டன் உரங்கள் தேங்கி உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

வேலைநிறுத்தம் 

இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பழைய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 8–வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் லாரிகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை. இதனால் உப்பு விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 ஆயிரம் டன் வரை உப்பு தேங்கி உள்ளது.

உரம் கிடைப்பதில் சிக்கல் 

மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் தற்போது விவசாய பணிகள் தொடங்கி உள்ளன. தற்போது விவசாயிகளின் முக்கிய தேவையான உரம் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. இங்கு மொத்தம் 26 ஆயிரம் டன் உரங்கள் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடந்து வரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பல மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் செய்திகள்