தூத்துக்குடி மாநகராட்சியில் 5 பள்ளிக்கூடங்கள் ரூ.8¼ கோடி செலவில் நவீனமயமாக்க திட்டம் ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 5 பள்ளிக்கூடங்கள் ரூ.8¼ கோடி செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளது.;

Update: 2018-07-27 21:00 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 5 பள்ளிக்கூடங்கள் ரூ.8¼ கோடி செலவில் நவீனமயமாக்கப்பட உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பள்ளிக்கூடங்கள்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் ஆரோக்கியமான சூழ்நிலையில் கல்வி கற்க வசதியாக அடிப்படை வசதிகள் மற்றும் மராமத்து பணிகள் அவ்வப்போது நடந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக மாநகராட்சியின் 5 பள்ளிக்கூடங்கள் ரூ.8 கோடியே 29 லட்சம் மதிப்பில் தனியார் மற்றும் வெளிநாட்டு தரத்துக்கு இணையாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் நவீனமயமாக்கப்படுகிறது.

திட்ட அறிக்கை

அதன்படி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஜின்பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் கட்டிடங்களை புதுப்பித்தல், கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், கண்காணிப்பு கேமிராக்கள், பயோ மெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகையை பதிவு செய்தல், உணவு அருந்தும் இடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், விளையாட்டு உபகரணங்கள், ஒலிபெருக்கி வசதிகள், புரொஜெக்டர்கள், கழிப்பறை வசதி, பசுமையான வளாகம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தொடர்ந்து மாநகராட்சியின் மீதம் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்த திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்