தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவ– மாணவிகள் சேர்க்கை கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ– மாணவிகள் சேர்க்கை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.;

Update: 2018-07-27 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ– மாணவிகள் சேர்க்கை நடந்து வருவதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு இசைப்பள்ளியில் சேர்வதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுவரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இந்த பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவ– மாணவிகளுக்கு அரசு விடுதி வசதி, வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதி செய்து தரப்படுகிறது.

வேலைவாய்ப்பு

3 ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுவரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே கலை ஆர்வமுள்ள மாணவ–மாணவிகள் அனைவரும் அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியை மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ்புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி என்ற முகவரியிலும் 0461–2300605 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்