தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் ஒரு தனியார் விமான சேவை தொடக்கம் பயணிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் தனியார் விமான சேவை நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-07-27 07:51 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி-சென்னை இடையே மேலும் தனியார் விமான சேவை நேற்று தொடங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விமான சேவை

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விமான நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருக்கு நேரடியாகவும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு தனியார் விமானம் நிறுவனம் தூத்துக்குடி-சென்னை இடையே 3 நேரங்களில் விமானத்தை இயக்குகிறது. இந்த விமானம் சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு 7.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது.

7.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. தொடர்ந்து சென்னையில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்டு 12.05 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. பின்னர் மதியம் 12.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 2.15 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.சென்னையில் இருந்து 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. 4.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு 6.15 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

தொடக்கம்

இந்த விமான சேவை நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் தூத்துக்குடிக்கு காலை 7.09 மணிக்கு வந்தடைந்தது. தூத்துக்குடிக்கு வந்த விமானத்துக்கு தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 61 பயணிகள் வந்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இறங்கிய பயணிகளுக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், மேலாளர் ஜெயராமன், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் சைனிமோள், விமான நிறுவன மேலாளர் பிரவின் ஆகியோர் பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

பயணிகள் மகிழ்ச்சி

இதே போன்று 2-வது விமானம் காலை 11.40 மணிக்கு 59 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்தது. அப்போது நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர். பின்னர் அந்த விமானம் 12.16 மணிக்கு 47 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. மாலையில் விமானம் 74 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு வந்தது. 72 பயணிகள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 5 விமான சேவை கிடைத்து உள்ளது. இதனால் தூத்துக்குடி பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்