மதுரை சரகத்தில் 40 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன டி.ஐ.ஜி. பிரதீப்குமார் தகவல்

மதுரை சரகத்தில் 40 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் கூறினார்.

Update: 2018-07-27 00:16 GMT
மதுரை, 


தமிழக காவல்துறை சார்பில் 58-வது தடகள விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் திருச்சியில் நடக்கிறது. இதற்கான ஜோதி ஓட்டத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த ஜோதி ஓட்ட குழுவினர் சென்னையில் இருந்து கோவை மண்டலம் வழியாக நேற்று மதுரை வந்தடைந்தனர். இந்த ஜோதியினை பெற்று கொண்ட மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் அதனை திருச்சிக்கு வழி அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நிருபர் களிடம் கூறுகையில், மதுரை சரகத்தில் விபத்துகள் அதிகமாக நடைபெறும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி தடுக்கப்பட்டு வருகிறது. விபத்து நடைபெறுவதை ஆவணங்களாக கண்காணிக்க கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 சதவீத விபத்துகளை குறைத்துள்ளோம். வரும் காலத்தில் முற்றிலுமாக விபத்துக்களை குறைக்க முயற்சி செய்வோம். விபத்துகளை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இதுபோல் தீவிர வாகன சோதனையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விபத்துகளை தடுக்க ஹெல்மெட் அணியாமலும், வாகன உரிமம் இல்லாமலும் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலங்களுக்கு தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில் 65 சதவீதம் பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார். 

மேலும் செய்திகள்