விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

வேலூர் சத்துவாச்சாரியில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-26 23:53 GMT
வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி 15-வது கிராஸ் சாலையில் உள்ள வீடு ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் முன்பாக வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர்.

அங்கு, 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆண்கள் இருவரும் சத்துவாச்சாரி முருகன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 30), ஆற்காட்டை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (29) என்பதும், இருவரும் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும், வேலூர், சத்துவாச்சாரி, குடியாத்தம் பகுதியை சேர்ந்த 3 பெண்களை வைத்து வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் கார்த்திக், வெங்கடேசன் மற்றும் 3 பெண்களையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டில் (ஜே.எம்.-1) ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட்டு வெற்றிச்செல்வி, பெண்கள் 3 பேரையும் விடுவிக்கவும், ஆண்கள் 2 பேரையும் ஜெயிலில் அடைக்கவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கார்த்திக், வெங்கடேசன் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்