போலீசார் துணையுடன் அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்

உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்காக விவசாயிகளை போலீசார் துணையுடன் அதிகாரிகள் அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-26 23:50 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஊத்துக்குளி-செங்கப்பள்ளி கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்களை அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர். இது எங்கள் பூர்வீகமான விவசாய நிலம். இதனால் அதில் குடியிருக்கும் விவசாயிகளை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும். செங்கப்பள்ளி முத்தணம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், குண்டடம், பொங்கலூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு நோய்களும் ஏற்படுவதாக தகவல்கள் வருகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்குவது குறித்து முறைப்படி அரசாணை வெளியிடும் வரை நிலம் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும்.

நிலம் கையகப்படுத்தப்படும் பல இடங்களில் அதிகாரிகள் போலீசார் துணையுடன் விவசாயிகளை மிரட்டி வருகிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த அச்சுறுத்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள். இதற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் எழுந்து இதே கோரிக்கையை முன்வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் பேசுகையில், பி.ஏ.பி. வாய்க்கால் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் ஜி.எஸ்.டி. வரி பிடித்தம் செய்யப்படுவதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உடுமலை தாலுகாவுக் குட்பட்ட பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றனர்.

இவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கடந்த காலங்களில் கரும்புக்கான இன்சூரன்ஸ் தொகை 2½ சதவீதமாக இருந்தது. இதனை தற்போது 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தேவையில்லாத ஒன்றாகும். இதனால் ஏற்கனவே உள்ளதுபோன்று 2½ சதவீதமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னாவரம், பூளவாடி பகுதிகளில் பத்திர பதிவிற்காக அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

முடிவில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் விவசாயிகள் இணைந்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்