திருப்பூரில் ரூ.292 கோடியில் நொய்யல் ஆறு மேம்பாட்டு பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கப்படும்

திருப்பூரில் ரூ.292 கோடி மதிப்பில் நொய்யல் ஆறு மேம்பாட்டு பணிகள் இன்னும் 6 மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

Update: 2018-07-26 23:47 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாநகரில் நொய்யல் ஆற்றை மேம்படுத்துவதற்காக ரூ.150 கோடியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள், சாயப்பட்டறை உரிமையாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார்.

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் பிற திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூரில் உள்ள பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள், பின்னலாடை தொழில் துறையினர், தன்னார்வ நிறுவனத்தினர், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜ் பேசும்போது, பிரிண்டிங் நிறுவனம், பட்டன், ஜிப் நிறுவனங்களில் இருந்து சாயக்கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்து விடுகிறார்கள். இந்த கழிவுநீரில் உப்புத்தன்மை குறைவு. ஆனால் அதிகமாக சாயம் வெளியேறுவதால் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் திறந்து விடுவதாக நினைக்கிறார்கள். இது போன்ற பிரிண்டிங், பட்டன், ஜிப் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் முதலிபாளையம் பகுதியில் பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தனியாக அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றார். சைமா சங்க பொதுச்செயலாளர் எம்பரர் பொன்னுசாமி பேசும்போது, நொய்யல் ஆற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி கூறினார்.

கூட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், சுற்றுச்சூழல் இணை தலைமை பொறியாளர் கோகுலதாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில்விநாயகம்(திருப்பூர் வடக்கு), சண்முகம்(திருப்பூர் தெற்கு), மதிவாணன்(பறக்கும்படை), உதவி பொறியாளர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 6 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.142 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. மீதம் உள்ள 6 கிலோ மீட்டர் தூரத்தை ரூ.150 கோடியில் மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சங்கிலிப்பள்ளம் ஓடை, ஜம்மனை ஓடையும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஒருங்கிணைப்பு செய்து மேற்கொள்ளப்படும்.

நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைப்பது, வீடுகள், தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நொய்யல் ஆற்றில் கலக்கவிடாமல் இருபுறமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டு அந்த கழிவுநீரை ஓரிடத்தில் தேக்கி வைக்கப்பட உள்ளது. பின்னர் அங்கு சுத்திகரிப்பு செய்து அந்த நீரை நொய்யல் ஆற்றில் விட்டு, ஒரத்துப்பாளையம் அணையில் தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களுக்குள் திட்ட அறிக்கைகள் முழுவதும் தயாரிக்கப்பட்டு 6 மாதத்துக்குள் பணிகள் தொடங்கப்பட உள்ளது. நீர்நிலைகளில் முறைகேடாக சாயக்கழிவுநீரை கலக்கும் நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிப்பு செய்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் வேண்டுகோளுக்கு ஏற்ப திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், காங்கேயம் தாலுகா பகுதியும், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் தாலுகா பகுதியும் என 94 ஆயிரத்து 521 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். விவசாய மக்களின் தேவையை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்