பணம் பறிப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 7 ஆண்டு ஜெயில்

பணம் பறிப்பதற்காக சிறுவனை கடத்தியவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-26 23:46 GMT
மும்பை,

மும்பை மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் சர்மா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகனை கடத்திச்சென்றார். பின்னர் அவர் சிறுவனை விடுவிக்க குறிப்பிட்ட தொகை தருமாறு அவனது தாயை மிரட்டினார். மேலும் அந்த பணத்தை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி அருகே கொண்டு வந்து தருமாறு கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கொடுத்த யோசனையின்படி அந்த பெண் பணத்துடன் பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி அருகே சென்றார்.

அப்போது பணத்தை வாங்க வந்த ராகுல் சர்மாவை அங்கு மறைந்திருந்த போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுவனை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்துவந்தது.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுவனை கடத்தி அவனது தாயிடம் பணம்கேட்டு மிரட்டிய ராகுல் சர்மாவிற்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

மேலும் செய்திகள்