நாடாளுமன்றத்தோடு சேர்த்து சட்டமன்றத்துக்கும் தேர்தல்

பாராளுமன்றத்தோடு சேர்த்து சட்டமன்றத்துக்கும் விரைவில் தேர்தல் வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு பேசினார்.

Update: 2018-07-26 22:30 GMT
காரியாபட்டி,


காரியாபட்டி ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் 21-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 31-ந்தேதி அனுசரிக்கப்படுவதையொட்டி மல்லாங் கிணறிலிருந்து தங்கப்பாண்டியன் சமாதி வரை நடைபெற உள்ள மவுன ஊர்வலத்தில் தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

எனது தந்தையார் தங்கப்பாண்டியனின் 21-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறேன். தற்போது கிராமம் வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூத் கமிட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்ய தலைமை கழக நிர்வாகிகள் வருகை தர உள்ளனர். எனவே 100 சதவீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

ஏனென்றால் நாடாளுமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பூத் கமிட்டியை முழுமையாக அமைக்க வேண்டும்.

மேலும் தற்போது சொத்து வரியை உயர்த்தி உள்ள தமிழக அரசைக் கண்டித்து காரியாபட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மணி என்ற ராமநாதன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர் மகேந்திர சாமி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், தோப்பூர் தங்கப்பாண்டியன், குரண்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசக்தி, மாவட்ட துணைச் செயலாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்