லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மஞ்சள் தேக்கம்

லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பதால் சேலம் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பிலான மஞ்சள் தேக்கமடைந்துள்ளன.

Update: 2018-07-26 22:45 GMT
சேலம்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.

இதனால் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஜவ்வரிசி, இரும்பு தளவாட பொருட்கள், ஜவுளி உள்பட பல்வேறு பொருட்கள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. மேலும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பருப்பு வகைகள், பூண்டு உள்ளிட்ட பொருட்கள் வராததால் அதன் விலை உயர்ந்துள்ளது.

சேலம் சத்திரம், பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட மஞ்சள் குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் உள்ள மஞ்சளை சுத்தம் செய்து தரம்பிரித்து அதை கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா, புதுடெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.30 கோடி மதிப்பிலான மஞ்சள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. குறிப்பாக இந்த பணியில் ஈடுபடும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் சிலர் கூறும் போது, ‘மஞ்சளை சுத்தம் செய்து தரம்பிரித்து மூட்டையில் கட்டுவதன் மூலம் தினமும் ரூ.200 வரை கூலி கிடைக்கும். ஆனால் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் கடந்த சில நாட்களாக வேலையில்லாமல் தவித்து வருகிறோம். லாரிகள் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கையில் தினமும் குடோன்களுக்கு வந்து செல்கிறோம்’ என்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து உர மூட்டைகள், சிமெண்டு மூட்டைகள், கோதுமை உள்ளிட்டவைகள் சரக்கு ரெயில்கள் மூலம் சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படும். லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த சில நாட்களாக சேலம் மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு சரக்கு ரெயில்கள் வருவதில்லை. இதனால் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்து காணப்படுகின்றனர்.

தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல் கூறும் போது, ‘லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 7 நாட்களாக ரூ.450 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இதில் மஞ்சள் ரூ.30 கோடி வரை குடோன்களில் தேக்கமடைந்துள்ளன. இந்த போராட்டத்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து காணப்படுகின்றனர். எனவே லாரி உரிமையாளர்களை மத்திய அரசு அழைத்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்